தமிழகத்தில் அனைவரும் நாளை முதல் 15-ந் தேதி வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் - மத்திய மந்திரி எல்.முருகன்
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிக அளவில் இருக்கிறது என்பது கவலைகொள்ளும் விஷயமாக உள்ளது என மத்திய மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி,
மத்திய மந்திரி எல்.முருகன் தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:,
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் 15-ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதுமே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் வீட்டிற்கும், மணிமண்டபத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறோம்.
இன்றைய இளைய தலைமுறையினர் சுதந்திரத்தைப் பற்றியும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட முன்னோர்கள் பற்றியும், தியாகிகள் பற்றியும் அறியும் விதமாக அனைத்து வீடுகளிலும் நாம் தேசிய கொடியை ஏற்ற வேண்டும். தேசியக்கொடியின் பெருமை, அதன் மகிமை, கொடிகாத்த குமரன் இறக்கும் தருவாயிலும் தேசியக்கொடியை கீழே விடாமல் பாதுகாத்த பெருமை நம்முடைய தமிழகத்திற்கு இருக்கிறது.
எனவே தமிழகத்தில் அனைவரும் முன்வந்து நாளை முதல் 15-ந் தேதி வரை வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் போதை பொருளை ஒழிப்பதற்கு சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்று கூறி உள்ளார். அவருடைய ஆட்சியில் சில ஊழல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதை ஒழிப்பதற்கு சர்வாதிகாரியாக மாறுவேன் என்று சொல்கிறாரா?.
போதைப்பொருளை ஒழிப்பது என்பது மிக முக்கியமானது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் மிக அதிக அளவில் இருந்து வருகிறது என்பது அனைவரும் கவலைகொள்ளும் ஒரு விஷயமாக இருக்கிறது. தமிழக அரசாங்கம் இதில் கவனம் செலுத்தி அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.