குழந்தை திருமணத்தை தடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்-விழிப்புணர்வு கூட்டத்தில் வலியுறுத்தல்
தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிகமாக நடைபெறும் மாவட்டமாக பெரம்பலூர் 2-வது இடத்தில் உள்ளது. எனவே குழந்தை திருமணத்தை தடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என விழிப்புணர்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
போக்சோ வழக்குகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போக்சோ வழக்குகள் அதிகளவு பதியப்பட்டு வருகிறது. மேலும் அந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் கொரோனா காலத்தில் இருந்து தற்போது வரைக்கும் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக கிராமங்களில் அதிகளவு குழந்தை திருமணம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் மாவட்ட அளவில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, குழந்தை திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பத்திரிகையாளர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது.
பெரம்பலூர் 2-வது இடம்
இதற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் தலைமை தாங்கினார். இதில் மாநில வள மையத்தின் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பூரணி, மூத்த பத்திரிகையாளர் ராமசுப்ரமணியன், தோழமை தொண்டு நிறுவன இயக்குனர் தேவநேயன், வக்கீல் தென்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:- தமிழகத்திலேயே குழந்தை திருமணம் அதிகம் நடைபெறும் மாவட்டத்தில் பெரம்பலூர் 2-வது இடத்தில் உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் உள்ளோம். குழந்தை திருமணம் செய்பவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாக 7 ஆண்டு சிறையும், அதிகப்பட்சமாக வாழ்நாள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று சட்டத்தில் உள்ளது.
தகவல் தெரிவிக்கலாம்
குழந்தை திருமணத்தை நடத்துபவர்களும், அதற்கு துணை போகிறவர்களும், துண்டுதலாக இருப்பவர்களும் குற்றவாளிகள் தான். அவர்கள் 2 ஆண்டு சிறை தண்டனையும் அல்லது ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் அல்லது சிறை தண்டனையும், அபராதமும் சேர்ந்து வழங்கப்படும். மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெற்றால் சைல்டுலைனை 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும்.
இதேபோல் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்தால் 181 என்ற எண்ணையும், பள்ளி மாணவ-மாணவிகள் ஆலோசனை பெற தமிழக அரசின் 14417 என்ற எண்ணையும், குற்றச் சம்பவங்கள் நடந்தால் போலீசாருக்கு 100 என்ற எண்ணையும் இலவசமாக தொடர்பு கொள்ளலாம், என்றனர்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, யுனிசெப் மற்றும் தோழமை தன்னார்வல தொண்டு நிறுவனம் ஆகியவை செய்திருந்தனர்.