கோவில் திருவிழாவில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கோவில் திருவிழாவில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

யாருக்கும் சிறப்பு மரியாதை கொடுக்கக் கூடாது என்றும், கோவில் திருவிழாவில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை

யாருக்கும் சிறப்பு மரியாதை கொடுக்கக் கூடாது என்றும், கோவில் திருவிழாவில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சிறப்பு மரியாதை

சிவகங்கை மாவட்டம் நாமனூரைச் சேர்ந்த லட்சுமணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் கிராமத்தில் சித்திவிநாயகர், சீனிவாசபெருமாள், கலியுக மெய் அய்யனார், சேவுக பெருமாள் அய்யனார் உள்ளிட்ட 11 கோவில்கள் அமைந்துள்ளன.

இங்கு கடந்த 1900-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோவில்களுக்கு என தனிப்பட்ட பழக்க, வழக்கங்கள் உள்ளன. இந்த ஆண்டுக்கான திருவிழா ஜூன் மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடக்கிறது.

இந்த நிலையில் இந்த கோவில்களின் திருவிழா நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த தனி நபர்கள் முயற்சித்து வருகின்றனர். அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். எனவே எங்கள் கிராம கோவில் திருவிழாவில் தனி நபர்கள் மற்றும் மூன்றாம் தரப்பினர் யாருக்கும் சிறப்பு மரியாதை கிடையாது என்று சம்பந்தப்பட்டவர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

அனைவரும் சமமாக நடத்த வேண்டும்

இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், மனுதாரர் கிராம கோவில் பக்தர்களும், பொதுமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும், யாருக்கும் சிறப்பு மரியாதை கொடுக்கக் கூடாது என்று ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சிவகங்கை வருவாய் அதிகாரி உறுதி செய்ய வேண்டும். அனைத்து சமூகத்தினரும் சமமாக நடத்துவதையும் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 12-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Next Story