அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x

தேவை உள்ளோர்க்கு பயன்படும் வகையில் அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகி முரளி, தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் உடல் உறுப்பு தானம் செய்தார். அது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கருத்து வருமாறு:-

எங்கும் நிறைந்துவிட்ட கலைஞரின் திட்டங்களால் இப்போதும் பல கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக அவர் அறிமுகப்படுத்திய கலைஞர் காப்பீட்டு திட்டத்தால் எண்ணற்ற ஏழை எளியோர் உயர் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்துள்ளனர்.

அத்தகைய தாயுமான தலைவரது நூற்றாண்டில் தனது குடும்பத்துடன் உடல் உறுப்பு தானம் செய்ய முடிவு எடுத்த சேலத்தைச் சேர்ந்த தி.மு.க. உடன்பிறப்பின் செயலால் நெகிழ்கிறேன்.

கடந்த 2009-ம் ஆண்டே எனது துணைவியாரும் நானும் உடல் உறுப்புகளை தானம் செய்ய விருப்பம் தெரிவித்து கையொப்பமிட்டு, அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்ததை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன். அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்வோம். மண்ணும் நெருப்பும் தின்னும் உடலை தேவை உள்ளோர்க்கு தந்து மனிதம் காப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story