அனைவரும் தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்-கலெக்டர் வேண்டுகோள்
அனைவரும் தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஆட்சி மொழி கருத்தரங்கில் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வேண்டுகோள் விடுத்தார்.
ஆட்சி மொழி கருத்தரங்கம்
தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி ஆட்சி மொழி கருத்தரங்கம் அரியலூர் அரசு கலை கல்லூரியில் நேற்று நடந்தது. கருத்தரங்கத்தை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்து கூறியதாவது:-
தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் நம்முடைய தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழியாகும். எனவே, தற்போதைய காலத்தில் நாம் அனைவரும் தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இத்தகைய சிறப்பு மிக்க தமிழ் மொழி நமக்கு தாய் மொழியாக இருப்பது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.
தமிழ் மொழியின் சிறப்புகள்
எனவே, தமிழ் மொழியின் வரலாறு, சிறப்புகள், தொன்மை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இளம் தலைமுறையினர் தவறாது அறிந்து கொள்ள வேண்டும். இதேபோன்று தமிழ் மொழியையும், முத்தமிழறிஞர் கருணாநிதியும் பிரிக்க முடியாது. கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய சேவைகள் மகத்தானதாகும். கருத்தரங்கில் பங்கேற்றுள்ள மாணவ-மாணவிகள் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து அறிந்து தங்களது தமிழ் மொழி குறித்த அறிவினை மேலும் வளர்த்து கொள்வதுடன் அனைவரும் நன்கு படித்து வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் கருணாநிதி நிகழ்த்திய செம்மொழி செயற்பாடுகள் குறித்து பெரம்பலூர் நச்செள்ளை தமிழ்ப்பேராயம், கதிரிளவன் ரவிக்குமாரும், குறிப்புகள் வரைதல், எழுதுதல் தொடர்பில் தீர்வுகள் குறித்து முன்னாள் தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் சிவசாமியும், மொழி பயிற்சி குறித்து அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் ராமகிருஷ்ணனும் கருத்துரை வழங்கினர். கருத்தரங்கில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் சித்ரா (முழு கூடுதல் பொறுப்பு), அரியலூர் அரசு கலை கல்லூரி முதல்வர் டோமினிக் அமல்ராஜ், தாசில்தார் கண்ணன், அரசு அலுவலர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.