'ஆன்லைன்' சூதாட்டம் வேண்டாம் என்பதே அனைவரின் கருத்து


ஆன்லைன் சூதாட்டம் வேண்டாம் என்பதே அனைவரின் கருத்து
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் சூதாட்டம் வேண்டாம் என்பதே அனைவரின் கருத்து என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்


ஆன்லைன் சூதாட்டம் வேண்டாம் என்பதே அனைவரின் கருத்து என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

ஆன்லைன் சூதாட்டம்

தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தாா். அப்போது நிருபா்கள் கேட்ட கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை நிரந்தரமாக தடை செய்யும் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் தாம திப்பதாக கூறப்படுகிறதே?

பதில்: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. இதை தமிழக கவர்னரிடம் தான் கேட்க வேண்டும். தமிழக கவர்னர் சில விவரங்களை கேட்டு இருக்கிறார். அமைச்சர்களும் விவரங்களை தெரிவித்து இருக்கின்றனர். எந்தவிதத்திலும் ஆன்லைன் சூதாட்டம் நடைபெறக்கூடாது என்பதில் அனைவருக்கும் ஒத்த கருத்து இருக்கிறது. அதில் எதாவது தொழில்நுட்ப பிரச்சினை இருக்கலாம். அதுகுறித்து கவர்னர் சில விவரங்களை சேகரிக்க வேண்டியது இருக்கலாம்.

கேள்வி: கவர்னர்கள் எல்லா விஷயத்திலும் ஏன் முரண்பாடாக இருக்கிறார்கள் என்ற கருத்து உள்ளதே?

பதில்: தெலுங்கானாவில் எந்த முரண்பாடும் இல்லை. அரசாங்கம் தான் முரண்பாடாக இருக்கிறது. கவர்னரிடம் முரண்பாடு இல்லை. என்னிடமும் சில மசோதாக்கள் நிலுவையில் இருக்கிறது. அவற்றை தாமதப்படுத்த வேண்டும் என்று இல்லை. தெலுங்கானாவில் வேலைவாய்ப்பு தொடர்பான மசோதாவில் சில விவரங்களுக்காக நிறுத்தி வைத்து இருக்கிறோம்.

மக்கள் நலன்

இவற்றை தாமதம் என்று எடுத்துகொள்வதை விட கால அவகாசம் என எடுத்து கொள்ள வேண்டும். மக்கள் நலனை அடிப்படையாக கொண்டு நான் பணியாற்றி வருகின்றேன். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் சிலர் விமர்சிக்கின்றனர்.

கவர்னர்கள் மக்களை சந்திக்கலாம். இதனால் பல பிரச்சினைகள் தீர்ந்து உள்ளது. நான் புதுச்சேரியில் மக்களை சந்திப்பதை புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி விமர்சிக்கிறாா். பஞ்சாயத்தில் பணியாற்றினாலும், கவர்னர் மாளிகையில் பணியாற்றினாலும் சரிஅது மக்களுக்கான பணியாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் எங்கள் பணி தொடரும்.

துணை அரசாங்கம்

கேள்வி: அ.தி.மு.க. ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு அப்போது இருந்த கவர்னர் ஒப்புதல் கொடுத்தார். ஆனால் தி.மு.க. ஆட்சியில் தற்போதைய கவர்னர் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்காதது அரசியல் காரணமா?

பதில்: இதன் உண்மை தன்மை எனக்கு தெரியாது. இந்த சட்டத்தில் கவர்னர் என்ன குறைபாடுகளை கண்டுபிடித்தார் என்பதை அவரிடம் கேட்டால் தான் தெரியும்.

கேள்வி: பா.ஜ.க. ஆட்சி நடக்காத மாநிலங்களில் கவர்னர்கள் இணை அரசாங்கம் நடத்தப்பாா்க்கிறாா்கள் என்று குற்றச்சாட்டு உள்ளதே?

பதில்: இணை அரசாங்கம் நடத்த பார்க்கவில்லை. துணை அரசாங்கம் நடத்தவே விரும்புகிறோம். கவர்னா்களின் செயல்பாடுகளை முதல்-அமைச்சர்கள் தவறாக புரிந்துகொள்கிறார்கள்.

இவ்வாறு அவா் கூறினார்.


Next Story