"உங்களுக்கு சேவையாற்ற ஒரு வாய்ப்பு தாருங்கள்"- ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரசாரம்
"உங்களுக்கு சேவையாற்ற ஒரு வாய்ப்பு தாருங்கள்" என்று ஈரோட்டில் நடந்த பிரசாரத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
"உங்களுக்கு சேவையாற்ற ஒரு வாய்ப்பு தாருங்கள்" என்று ஈரோட்டில் நடந்த பிரசாரத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
அமைச்சர் பிரசாரம்
தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று ஈரோடு கருங்கல்பாளையம் குயிலாந்தோப்பு, கே.ஏ.எஸ்.நகர் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவு தெரிவித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியபோது கூறியதாவது:-
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பற்றி விரிவாக பேச வேண்டிய அவசியம் இருக்காது. பெரியார் குடும்பத்தை சேர்ந்த அவரை பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும். உங்களுடைய பகுதியில் உள்ள கோரிக்கையை அவரிடம் தெரிவித்தால், முதல்-அமைச்சரையோ, அமைச்சரையோ நேரில் சந்தித்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உங்களுடைய கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி கொடுப்பார். நீண்ட கால பிரச்சினையான பட்டா பெற்று கொடுக்கப்படும். சாக்கடை, தெரு விளக்குகள், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கொரோனா நிவாரண நிதியாக 2 கோடியே 9 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கினார். பெண்களுக்கு அரசு டவுன் பஸ்களில் கட்டணமில்லா பயணம், கூட்டுறவு சங்கங்களில் 5 பவுனுக்கு கீழ் உள்ள பெண்களுக்கான கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாய்ப்பு
பிரசாரத்தில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசும்போது கூறியதாவது:-
எனது தாத்தா, தந்தை, மகன் வழியில் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன். இந்த பகுதி மக்களுக்கு பட்டா இல்லை என்று கூறினார்கள். எனது வீட்டுக்கே பட்டா கிடையாது. எனவே உங்களுக்கு பட்டா வாங்கி கொடுக்க முயற்சி செய்வதன் மூலமாக எனக்கும் பலன் கிடைக்கும். மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எனது முன்னோர்கள் விட்டு சென்ற 90 சதவீதம் சொத்து விற்றுவிடப்பட்டது. மீதமுள்ள 10 சதவீதம் சொத்துக்களே எனக்கும், எனது குடும்பத்துக்கும் போதுமானது. எனவே உங்களுக்கு சேவையாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.