நெஞ்சுவலிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று


நெஞ்சுவலிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று
x

நெஞ்சுவலிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு லேசான கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் அவரது உடல்நலம் தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், டெல்லிக்கு சென்று கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்தது. இதையடுத்து அவர் போரூரில் உள்ள ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று

இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியின் மருத்துவ இயக்குனர் ஆர்.பி.சுதாகர் சிங் வெளியிட்டுள்ள மருத்துவக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இதயநோய் மற்றும் லேசான கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், நல்ல நிலையில் உடல்நலம் தேறி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story