ஒரத்தநாட்டுக்கு, நாளை எடப்பாடி பழனிசாமி வருகை


ஒரத்தநாட்டுக்கு, நாளை எடப்பாடி பழனிசாமி வருகை
x

ஒரத்தநாட்டில் நாளை எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகளை ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

ஒரத்தநாட்டில் நாளை எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகளை ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

ஒரத்தநாட்டில் பொதுக்கூட்டம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நாளை(திங்கட்கிழமை) மாலை அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.இதற்காக ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே பிரமாண்ட மேடை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்

தமிழகத்தில் ஜெயலலிதா வழியில் மக்களுக்கான ஆட்சியை வழங்கிய எடப்பாடி கே.பழனிசாமி, கட்சியின் பொதுச் செயலாளராகி முதல் முறையாக தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார். அதன்படி எடப்பாடி பழனிச்சாமி நாளை(திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு கபிஸ்தலத்தில் முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவ சிலையை திறந்து வைக்கிறார்.இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஒரத்தநாட்டில் ஆயிரக்கணக்கானோர் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணையும் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

வரவேற்பு

தஞ்சை மாவட்டத்துக்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கிப்பட்டி, திருவையாறு, திருக்கருகாவூர், மேலஉளூர் உள்ளிட்ட இடங்களில் கட்சி பிரமுகர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. எனவே நிகழ்ச்சிகளில் கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் பெருமளவு கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ., கூறினார். அப்போது பட்டுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி.சேகர், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர், மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.காந்தி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கு.ராஜமாணிக்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தஞ்சை நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் என்.எஸ்.சரவணன், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் கோவி.தனபால், தொண்டராம்பட்டு முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.ஆசைத்தம்பி, தெலுங்கன்குடிக்காடு முன்னாள் ஊராட்சி தலைவர் பஞ்சு ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


Next Story