நாகை அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபால் மைத்துனர் கைது


நாகை அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபால் மைத்துனர் கைது
x

வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த வழக்கில் நாகை அ.தி.மு.க முன்னாள் எம்.பி. கோபால் மைத்துனர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

திருவாரூர்

நன்னிலம்;

வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த வழக்கில் நாகை அ.தி.மு.க முன்னாள் எம்.பி. கோபால் மைத்துனர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா வாளாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்(வயது40). இவர், நன்னிலம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-கடந்த 2019-ம் ஆண்டு நன்னிலத்தில் வசித்து வரும் அ.தி.மு.க முன்னாள் எம்.பி. டாக்டா் கோபால், அவரது மனைவி, மைத்துனர் குகன், குகனின் மனைவி கோமதி ஆகியோர் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா எண்கண் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், மன்னார்குடியை சேர்ந்த அன்புராஜ், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த தீபா சங்கர், காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த மாதவன் ஆகியோருக்கு அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் வேலை வாங்கி தருவதாக கூறினர்.

போலி நியமன ஆணை

இதை நம்பி நான்(ஆனந்தன்) ரூ.28 லட்சத்து 50 ஆயிரத்தை மேற்கண்ட நபர்களிடம் வசூலித்து அந்த பணத்தை கோபால், அவரது மனைவி, மைத்துனர் குகன் அவரது மனைவி கோமதி ஆகியோரிடம் வழங்கினேன். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் சில நாட்களில் குகன் மூலம் அடையாள அட்டை மற்றும் நியமன ஆணையை வழங்கினர்.இந்த நியமன ஆணை மற்றும் அடையாள அட்டையை சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூாிக்கு கொண்டு சென்றபோது அவை அனைத்தும் போலியானது என தெரியவந்தது. இது குறித்து நன்னிலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

கைது

மனுவை விசாரித்த நீதிபதி சீதாலட்சுமி இந்த மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நன்னிலம் போலீசாருக்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டாா். இதன்பேரில் நன்னிலம் போலீசார் முன்னாள் எம்.பி. கோபால், அவரது மனைவி, மைத்துனர் குகன், குகனின் மனைவி கோமதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.இந்தநிலையில் நேற்று முன்தினம் நன்னிலம் போலீசார் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலின் மைத்துனர் குகனை வேளாங்கண்ணி - திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வைத்து கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story