அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்


அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
x

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு கொடுத்தார்.

திருப்பூர்

திருப்பூர்

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு கொடுத்தார்.

அத்திக்கடவு-அவினாசி திட்டம்

முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் மற்றும் அவினாசி, ஊத்துக்குளி, குன்னத்தூர் பகுதியை சேர்ந்த அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோரிடம் கவன ஈர்ப்பு மனு கொடுத்தனர்.

பின்னர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நான் சட்டமன்றத்தில் அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தேன். இதன் பயனாக அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 32 நீர்நிலைத்துறை சம்பந்தப்பட்ட ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏரிகளும், 971 குளம், குட்டைகளும் பாசன வசதி பெறக்கூடிய வகையில் 97 சதவீத பணிகள் முடிவுற்றதாக கூறியிருக்கிறார்கள். நான் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் முதல்-அமைச்சர் அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளை ஆய்வு செய்து, விவசாயிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த திட்டத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக குன்னத்தூர், ஊத்துக்குளி பகுதியில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள், பொதுநல அமைப்புகள் சார்பிலும், அவினாசி-அத்திக்கடவு திட்ட போராட்டக்குழுவினரும் சேர்ந்து அமைச்சர், கலெக்டரிடம் கவன ஈர்ப்பு மனுவாக கொடுக்கப்பட்டுள்ளது.

குட்டைகள் சேர்ப்பு

விவசாயிகள் கணக்கெடுக்கையில் 1,400 குளம், குட்டைகள் விடுபட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அந்த குளம், குட்டைகளையும் இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும். முதல்-அமைச்சர், படிப்படியாக திட்டத்தை நிறைவேற்றும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்துள்ளதாகவும், பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இந்த திட்டத்துக்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சிலருக்கு வழங்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கும் இழப்பீட்டுத்தொகையை விரைந்து வழங்க கோரிக்கை வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


1 More update

Next Story