பெண்ணிடம் நகை பறித்த முன்னாள் ராணுவ வீரர் கைது

கோவை அருகே மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
துடியலூர்
கோவை அருகே மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண்ணிடம் நகைபறிப்பு
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே வீர பாண்டி பிரிவு ஜோதிபுரத்தை சேர்ந்தவர் வேணுகோபால். இவருடைய மனைவி ராதாமணி. இவருடைய மகன் விவேக் (வயது 18). கல்லூரி மாணவர்.
விவேக் தனது தாய் ராதாமணி யுடன் மேட்டுப்பாளையம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று கொண்டு இருந்தார். மோட்டார் சைக்கிளை விவேக் ஓட்டி சென்றார்.
அப்போது அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென்று ராதா மணியின் அருகே வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி செல்ல முயன்றார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராதாமணியின் மகன் விவேக் சுதாரித்து கொண்டு அந்த 2 பேரை மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்றார். பின்னர் அவர், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் ஒரு மர்ம நபரை மட்டும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
முன்னாள் ராணுவ வீரர்
போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் ராமநாத புரம் மாவட்டத்தை சேர்ந்த பழனிநாதன் (43) என்பதும், ராணு வத்தில் பணியாற்றிய அவர், முன்னாள் ராணுவ வீரர் என்பதும் 7 வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பழனி நாதனை கைது செய்தனர் தப்பி ஓடிய மற்றொரு நபரான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை பறித்த முன்னாள் ராணுவ வீரரை கல்லூரி மாணவர் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






