முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பலி


முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பலி
x

கடலூரில், தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பலியானார்.

கடலூர்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே தீர்த்தனகிரியை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் பழனிவேல் (வயது 45). அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான இவர், என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று மாலை கடலூருக்கு வந்த அவர், தனது நண்பரான நெல்லிக்குப்பம் கீழ்பாதியை சேர்ந்த செல்வம் (51) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் செம்மண்டலம் பஸ் நிறுத்தம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் அவர்கள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய அவர்கள் 2 பேரும் சாலையோரம் விழுந்தனர்.

பலி

அப்போது பஸ்சின் பின் சக்கரம் பழனிவேல் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் செல்வம் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விபத்து நடந்த இடம் கடலூர் -நெல்லிக்குப்பம் மெயின்ரோடு என்பதால் அந்த பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். இருப்பினும் அந்த பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த விபத்து பற்றிய புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story