முன்னாள் கிராம நிர்வாக அலுவலருக்கு ஒரு ஆண்டு சிறை


முன்னாள் கிராம நிர்வாக அலுவலருக்கு ஒரு ஆண்டு சிறை
x
தினத்தந்தி 4 March 2023 7:30 PM GMT (Updated: 4 March 2023 7:31 PM GMT)
சேலம்

சேலம்:-

ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஆத்தூர் முன்னாள் கிராம நிர்வாக அலுவலருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மின் இணைப்புக்கான சான்றிதழ்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 77). இவர் கடந்த 1997-ம் ஆண்டு தென்குமரை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றினார். அப்போது அதே ஊரை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது கிணற்றுக்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்கான சான்றிதழ் கேட்பதற்காக கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார்.

அப்போது அங்கிருந்த அருணாசலம், விவசாயிடம் மின் இணைப்புக்காக ரூ.1,000 லஞ்சம் கேட்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அருணாசலத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் கோர்ட்டில் நடைபெற்றது. இதற்கிடையே கடந்த 2004-ம் ஆண்டு அருணாசலத்தை கோர்ட்டு விடுதலை செய்தது.

ஒரு ஆண்டு சிறை

இதைஎதிர்த்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் அருணாசலத்துக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பையொட்டி லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் அருணாசலத்தை சென்னைக்கு அழைத்து சென்றனர். அதைத்தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு, சேலம் மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீசார் நேற்று அழைத்து வந்தனர்.

அப்போது அவர் போலீசாரிடம் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து அவரை உடனடியாக சிறை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Related Tags :
Next Story