மாவட்டத்தில் இன்று தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 18,013 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் இன்று தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை 18 ஆயிரத்து 13 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் இன்று தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை 18 ஆயிரத்து 13 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வுகள் இன்று(வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் இந்த தேர்வை 8 ஆயிரத்து 890 மாணவர்களும், 9 ஆயிரத்து 123 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 13 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
இவர்களுக்காக மாவட்டத்தில் 101 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இது தவிர மூன்று தேர்வு மையங்களில் 505 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
1,826 பணியாளர்கள்
இந்த தேர்வு பணிக்காக 20 வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், 104 முதன்மை கண்காணிப்பாளர்கள், 104 துறை அலுவலர்கள், 24 வழித்தட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கூடுதல் தலைமை கண்காணிப்பாளர் ஒருவரும், 12 பறக்கும் படையினரும், 75 தேர்வு மைய கண்காணிப்பாளர்களும், 31 நிலையான பறக்கும் படையினரும், 1,478 தேர்வு மைய மேற்பார்வையாளர்களும் என மொத்தம் 1,826 பேர் தேர்வு பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.