மத்திய அரசின் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி-கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல்
நாமக்கல்:
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்வுக்கு நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போட்டி தேர்வு
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் 'ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு 2023' தொடர்பான அறிவிப்பினை கடந்த 3-ந் தேதி வெளியிட்டு உள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் 'பி' மற்றும் குரூப் 'சி' நிலையில், 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களை அறிவித்து உள்ளது. இந்த தேர்வுக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வி தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வு திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களை https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/noticeCGLE03042023.pdf என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
கடைசி நாள்
இந்த காலி பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இந்த தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற மே மாதம் 3-ந் தேதி ஆகும். ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே மாதம் 4-ந் தேதி ஆகும்.
தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு வருகிற ஜூலை மாதத்தில் ஆந்திர மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்களில் நடைபெற உள்ளது.
இலவச பயிற்சி
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன. இந்த தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
எனவே, தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.