தேர்வு மையத்திற்கு செல்போன் கொண்டு செல்ல தடைமாநில தொழிற் கல்வி இணை இயக்குனர் எச்சரிக்கை


தேர்வு மையத்திற்கு செல்போன் கொண்டு செல்ல தடைமாநில தொழிற் கல்வி இணை இயக்குனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 March 2023 12:30 AM IST (Updated: 12 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

தேர்வு மையத்திற்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதையும் மீறி கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் என மாநில தொழிற்கல்வி இணை இயக்குனர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிளஸ்-2 தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த தேர்வை 10 ஆயிரம் மாணவர்கள், 9,877 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 877 பேர் எழுத உள்ளனர். அதற்காக 85 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

பிளஸ்-2 பொதுத்தேர்வு பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள் 85 பேர், துறை அலுவலர்கள் 85 பேர், அறை கண்காணிப்பாளர்கள் 1,377 பேர், நிலையான படையினர் 220 பேர், வழித்தட அலுவலர்கள் 20 பேர் என மொத்தம் 1,787 பேர் ஈடுபட உள்ளனர்.

ஆயத்த கூட்டம்

இந்த நிலையில் முதன்மை கண்காணிப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டுப்பாட்டு மைய பொறுப்பாளர்கள் ஆகியோருக்கான தேர்வுக்கு முந்தைய ஆயத்தக்கூட்டம் நேற்று நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடந்தது.

முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் ரவி, கணேசன், நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாமக்கல் மாவட்ட தேர்வு பொறுப்பாளரும், மாநில தொழிற்கல்வி இணை இயக்குனருமான ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

தேர்வு பணியில் ஈடுபடக்கூடிய அனைவரும் கவனமாக பணியாற்ற வேண்டும். அலுவலர்கள் அனைவரும் இணைந்து திட்டமிட்டு செயல்பட வேண்டும். நமக்கு மேலே ஒரு கண்காணிப்பு அலுவலர் இல்லாமலேயே ஒழுக்க சீராக செயல்பட வேண்டும்.

செல்போனுக்கு தடை

தேர்வுக்கு வரும் குழந்தைகளை, வாழ்த்தி மகிழ்ச்சியோடு தேர்வு மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அக்கரையுடனும், அனுசரணையுடனும் உடன் கண்டிப்புடனும் செயல்பட வேண்டும். தேர்வு மையத்தில், செல்போன் கொண்டு செல்ல முழுமையாக தடை செய்யப்பட்டு உள்ளது. அதையும் மீறி கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர்கள் பெரிசாமி, கிருஷ்ணமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலரின் உதவியாளர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story