10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: அறை கண்காணிப்பாளர்கள் 1,731 பேருக்கு குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் 1,731 அறை கண்காணிப்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
10-ம் வகுப்பு தேர்வு
தமிழகத்தில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி தொடங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த தேர்வை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 300 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 641 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
அதற்காக மாவட்டம் முழுவதும் 94 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தேர்வு பணியில் 94 முதன்மை கண்காணிப்பாளர்கள், 95 துறை அலுவலர்கள், 1,731 அறை கண்காணிப்பாளர்கள், 140 பறக்கும் படையினர், 9 கட்டுகாப்பு மைய அலுவலர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 69 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
குலுக்கல் முறையில் தேர்வு
இந்தநிலையில் அறை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கல்வி அலுவலர் ரவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்வை சிறப்பான முறையில் நடத்த வேண்டும். அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள், துறை அலுவலர்கள், செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மாணவர்களும், செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தேர்வுக்கு செல்லும் மாணவ, மாணவிகளை முதன்மை கண்காணிப்பாளர்கள் வாழ்த்தி அனுப்ப வேண்டும். துண்டு சீட்டு (பிட்) வைத்து தேர்வு எழுதுவதை தவிர்த்து, நேர்மையான முறையில் தேர்வு எழுத மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அறை கண்காணிப்பாளர்கள் பணியாற்றும் மையங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டன. இதில் பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் பெரியசாமி, கண்காணிப்பாளர் விக்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.