சிவகளை அகழாய்வில் தங்கப்பொருள் கண்டுபிடிப்பு


சிவகளை அகழாய்வில் தங்கப்பொருள் கண்டுபிடிப்பு
x

சிவகளை அகழாய்வில் முதன்முறையாக தங்கப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பரும்பு பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் 3-வது கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள், இரும்பு, வெண்கலத்தாலான பொருட்கள், சங்கு பொருட்கள், நெல்மணிகள் போன்றவை கண்டறியப்பட்டது. தொடர்ந்து முதுமக்கள் தாழிகளை திறந்து ஆய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே பழங்கால மக்களின் வாழ்விடங்களை கண்டறியும் வகையில், சிவகளை பராக்கிராமபாண்டி திரடு, பொட்டல்கோட்டை திரடு பகுதியிலும் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு 20-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு செய்யப்படுகிறது. தொல்லியல் துறை இயக்குனர் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தங்கத்தாலான பொருள்

இந்த நிலையில் பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் தங்கத்தாலான பழங்கால பொருள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சுமார் 1 செ.மீ. நீளமும், 30 மில்லி கிராம் எடையும் கொண்டதாக உள்ள தங்கப்பொருளில் மெல்லிய கோடுகளாக உள்ளது. அது சிதைந்த நிலையில் உள்ளதால், பழங்காலத்தில் அதனை ஆபரணமாக பயன்படுத்தினரா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிவகளை அகழாய்வில் முதன்முறையாக தங்கத்தாலான பொருள் கண்டுபிடிக்கப்பட்டது தொல்லியல் ஆய்வாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.


Next Story