அகழாய்வு பணிகள் மும்முரம்


அகழாய்வு பணிகள் மும்முரம்
x

சிவகாசி அருகே அகழாய்வு பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.

விருதுநகர்

தாயில்பட்டி,

சிவகாசி அருகே அகழாய்வு பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.

அகழாய்வு பணி

சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் பண்டைய காலத்தில் வைப்பாற்றின் கரையில் வாழ்ந்த மக்களின் நாகரீகம் குறித்து அறிவதற்காக 25 ஏக்கர் பரப்பளவில் கடந்த மார்ச் மாதம் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணியினை அமைச்சர் தங்கம்தென்னரசு தொடங்கி வைத்தார். வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து தற்காலம் வரை மக்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள், பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதால் அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.

தற்போது 15 அடி ஆழம் வரை குழிகள் தோண்டப்பட்டுள்ளன. 12 குழிகள் முழுமையாக தோண்டப்பட்டு அதில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பதக்கங்கள், காதணிகள், தலையாட்டி பொம்மைகள், சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய மண் பொம்மைகள், சிறிய அளவிலான மாட்டுவண்டி சக்கரம், தீப்பொறி உருவாக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட கற்கள், சிறுவர்கள் நொண்டி விளையாட பயன்படுத்திய வட்ட சில்லுகள், விசில், தாயக்கட்டைகள் ஆகியவை கிடைத்தன.

கண்காட்சி

அதேபோல பதக்கங்கள், முதியோர்கள் புகைபிடிக்க பயன்படுத்திய புகைபிடிப்பான்கள், சங்கு வளையல்கள் செய்ய பயன்படுத்திய சங்குகள், ஏராளமான மண்பாண்டங்கள், யானை தந்தம், தந்தத்தால் செய்யப்பட்ட பதக்கங்கள், மான்கொம்பால் செய்யப்பட்ட புல்லாங்குழல், கருங்கல், விலங்கின் பற்கள், சுடுமண் பெண் சிற்பம் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டது.

அழகிய வேலைப்பாடுடன் கூடிய மண் குடங்கள், மண் மூடி உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. தற்போது அகழாய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த அகழாய்வு பணியின் முதல் கட்டம் செப்டம்பர் மாதம் வரை நடைபெறுகிறது. ஆகஸ்டு மாதத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு கிடைத்த பொருட்களை கண்காட்சியில் வைக்கும் பணியை தொடங்குவார்கள் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story