உபரிநீருக்காக ஏங்கும் 17 ஏரிகள்


தினத்தந்தி 28 Sep 2022 6:45 PM GMT (Updated: 28 Sep 2022 6:46 PM GMT)

பாப்பாரப்பட்டி, இண்டூர் பகுதிகளில் உள்ள 17 ஏரிகளுக்கு உபரிநீர் வராததால் 60 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி, இண்டூர் பகுதிகளில் உள்ள 17 ஏரிகளுக்கு உபரிநீர் வராததால் 60 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கிளை கால்வாய் திட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றாக பஞ்சப்பள்ளி அணை உள்ளது. இந்த அணை நிரம்பும் காலங்களில் உபரிநீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகளில் நிரப்புவதற்காக கடந்த 1973-ம் ஆண்டு ஜெர்தலாவ் பிரதான கால்வாய் வெட்டப்பட்டது. இதன் மூலம் பஞ்சப்பள்ளி அணை நிரம்பும் காலங்களில் உபரிநீர் திறக்கப்பட்டு பல்வேறு ஏரிகளில் நிரப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நீர்வள ஆதாரம் குறைந்த பகுதிகளான திருமல்வாடி, கிட்டம்பட்டி, பனைக்குளம், பாப்பாரப்பட்டி, பாலவாடி, இண்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள 17 ஏரிகளுக்கு பஞ்சப்பள்ளி அணையின் உபரிநீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

நிலம் வழங்கிய விவசாயிகள்

இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பஞ்சப்பள்ளி அணையின் உபரிநீரை பாப்பாரப்பட்டி, இண்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள 17 ஏரிகளுக்கு கொண்டு செல்வதற்கு கால்வாய் வெட்டும் பணி கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்றது. இந்த பணி கடந்த 2013-ம் ஆண்டு நிறைவடைந்தது.

இந்த கிளை கால்வாய் எர்ரனஅள்ளியில் இருந்து தொடங்கி பாப்பாரப்பட்டி வரையும், அங்கிருந்து இண்டூர் வரையும் இரு பிரிவுகளாக சுமார் 25 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் பணிக்காக நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் ஒரு பகுதியை வழங்கினார்கள். இந்த கால்வாயில் மழைக்காலங்களில் பஞ்சப்பள்ளி அணையின் உபரிநீர் வரும்போது விவசாயம் செழிப்பதோடு இந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

உபரிநீர்

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பஞ்சப்பள்ளி அணை 3 முறை நிரம்பி உபரிநீர் வெளியேறியபோதும் இந்த கால்வாயில் இதுவரை ஒரு முறை கூட தண்ணீர் வரவில்லை. இதனால் இந்த 17 ஏரிகள் தொடர்ந்து தண்ணீர் இன்றி வறண்ட நிலையிலே உள்ளன. கடந்த சில மாதங்களாக பெய்த பருவமழை காரணமாக அண்மையில் பஞ்சப்பள்ளி அணை நிரம்பியது. இதை தொடர்ந்து பிரதான கால்வாயில் உபரிநீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் பல்வேறு ஏரிகள் தற்போது நிரம்பி வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக இதுவரை உபரிநீரே ஓடாத கிளை கால்வாயிலும் பஞ்சப்பள்ளி அணையின் உபரிநீரை 17 ஏரிகளுக்கு திறக்க துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இந்த ஏரிகளை சார்ந்து உள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏங்கும் ஏரிகள்

பாரதிபுரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன்:-

பஞ்சப்பள்ளி அணையின் உபரிநீரை பாப்பாரப்பட்டி, இண்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏரிகளில் நிரப்பும் கிளை கால்வாய் வெட்டப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஏற்கனவே வறட்சி மற்றும் போதிய நீர்வள ஆதாரம் இல்லாத இந்த பகுதியில் கிளை கால்வாய் மூலம் உபரிநீர் கிடைத்து 17 ஏரிகளில் நிரப்பப்பட்டால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும் என்று எதிர்பார்த்தோம். இந்த திட்டத்திற்காக இந்த பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் நிலங்களை வழங்கினார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த கிளை கால்வாயில் ஒரு முறை கூட உபரிநீர் வரவில்லை. இதனால் 17 ஏரிகளுக்கும் உபரிநீருக்காக ஏங்குகின்றன. இதனால் இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பஞ்சப்பள்ளி அணை நிரம்பியதால் பிரதான கால்வாயில் உபரிநீர் திறக்கப்பட்டது. அந்த கால்வாய் மூலம் தண்ணீரை பெறும் பெரும்பாலான ஏரிகள் தற்போது நிரம்பிவிட்டன. எனவே இதுவரை தண்ணீரே திறக்கப்படாத கிளை கால்வாயிலும் உபரிநீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீர் உரிமை

வேடிக்கொட்டாயை சேர்ந்த சரஸ்வதி:-

பஞ்சப்பள்ளி அணையின் உபரிநீரை 17 ஏரிகளில் நிரப்பும் கிளை கால்வாய் அமைத்து பல ஆண்டுகள் ஆன பின்னரும் இந்த ஏரிகளுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. பஞ்சப்பள்ளி அணை நிரம்பி பிரதான கால்வாய் பகுதியில் உள்ள ஏரிகளில் நீர் நிரம்பி வருகிறது. பிரதான கால்வாய் திட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பிய பிறகு இந்த கிளை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதற்குள் பஞ்சப்பள்ளி அணையில் உபரிநீர் வெளியேறுவது நின்று விட்டால் கிளை கால்வாயை நம்பி உள்ள 17 ஏரிகளை சேர்ந்த 60 கிராமங்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும். எனவே விவசாயிகள், பொதுமக்களின் நீர் உரிமையை பாதுகாக்க வேண்டும். பிரதான கால்வாயில் உபரிநீர் திறக்கப்பட்டது போல் கிளைக்கால்வாயிலும் உபரிநீரை விரைவாக திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story