2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவது தொடங்கியது


2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவது தொடங்கியது
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவது தொடங்கியது

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவது தொடங்கியது. பெரும்பாலான இடங்களில் கூட்டம் இன்றி காணப்பட்டது.

2000 ரூபாய் நோட்டு

2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 19-ந் தேதி அறிவித்தது. 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் மே 23-ந்தேதி அனைத்து வங்கிகளிலும் அதை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக செப்டம்பர் 30-ந்தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கை இன்று தொடங்கியது. இதற்காக அனைத்து வங்கிகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவு வந்தால் அவற்றை மாற்றி கொடுப்பதற்கு ஏற்ப பணத்தை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. அதன்பேரில் அனைத்து வங்கிகளிலும் கடந்த 19-ந் தேதியே தேவையான அளவுக்கு 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் இருப்பு வைக்கப்பட்டன. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு வங்கிகளில் உரிய வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறி இருந்தது.

கூட்டம் இல்லை

இந்த நிலையில் கோவையில் 951 வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவது நேற்று முதல் தொடங்கியது. பெரும்பாலான வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற தனி இட வசதி உருவாக்கப்பட்டு இருந்தது. சில வங்கிகளில் மக்கள் கூட்டமாக வரலாம் என்று கருதி தனி வரிசை அமைத்து இருந்தனர். மேலும் வழக்கமான பணப்பரிவர்த்தனை கவுண்ட்டர்கள் தவிர 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக என்று தனியாக சிறப்பு கவுண்ட்டர்களும் அமைக்கப்பட்டு இருந்தன. முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.கோடை காலம் என்பதால் வங்கிக்கு வருபவர்களின் தாகத்தை தீர்ப்பதற்கு தண்ணீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது.

கடந்த 2016-ம் ஆண்டு 500 மற்றும் 1,000 ரூபாய் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட போது வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பணத்தை மாற்ற போட்டி போட்டனர். இதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாக நேரிட்டது. ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற பெரும்பாலான வங்கிகளில் போதிய அளவு கூட்டம் இல்லை.

எளிதாக மாற்றி சென்றனர்

2000 ரூபாய் நோட்டுகளுடன் வந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. நீண்ட வரிசையில் நின்று 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் அளவுக்கு இல்லாமல் ஓரிருவர் மட்டுமே வந்து சென்றதை காண முடிந்தது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்பதால் மக்கள் மத்தியில் எந்த அவசரமும் காணப்படவில்லை.வங்கிகளில் பணம் மாற்றுவதற்கு வந்தவர்களில் பெரும் ஏழை எளிய மக்களை அதிகளவில் காணமுடியவில்லை.

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. விண்ணப்பம் ஏதும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்பட்டு இருந்ததால் பொதுமக்கள், வியாபாரிகள், வர்த்தக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மிக எளிதாக 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி சென்றனர். சில வங்கிகளில் மட்டும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு என்று தனி செலான் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

ஒருவர் 10 நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்ற நிலை இருந்ததால் அதற்கேற்ப வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. மக்கள் கூட்டம் அதிகளவு இருக்கும் சில வங்கிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.


Next Story