மாடி விட்டு மாடி தாவி ஓடியவரால் பரபரப்பு
கள்ளக்குறிச்சியில் நள்ளிரவில் மாடி விட்டு மாடி தாவி ஓடியவரால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கஸ்தூரிபாய் தெருவில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் வீட்டின் மாடியில் ஏறி கதவை திறக்க முயன்றார். அப்போது சத்தம் கேட்டு வந்த வீட்டின் உரிமையாளர் திருடன், திருடன் என கூச்சல் எழுப்பினார். இதையடுத்து அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி பெருமாள் கோவில் தெருவில் உள்ள மற்றொரு வீட்டின் முன் கேட்டில் ஏறி குதித்து வறண்டா பகுதியில் உள்ள படியின் வழியாக மாடியில் ஏறினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் திருடன் திருடன் என கூச்சலிட்டனர். சிலர் அவரை பிடிக்கவும் முயன்றனர். அப்போது மர்ம நபர் குரங்கை போன்று அடுத்தடுத்து மாடி வீட்டு மாடி தாவி அங்கும் இங்குமாக ஓடினார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லக்கண்ணு, சண்முகம் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசாருடன், பொதுமக்களும் இணைந்து மர்மநபரை தேடினார்கள். அப்போது மாடி மாடியாக குதித்து 5-வது வீட்டு மாடியில் உள்ள குளியல் அறையில் பதுங்கி இருந்த மர்ம நபரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த மாயவன் (வயது45) என்பதும் குடிபோதையில் வீட்டின் மாடிக்கு சென்றதும் தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு அவரை போலீசார் விடுவித்தனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.