ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில்அ.தி.மு.க. கவுன்சிலர் தர்ணா போராட்டம்பணிகள் நடக்கவில்லை என தி.மு.க. கவுன்சிலர்களே பேசியதால் பரபரப்பு
ஓசூர்:
ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் தர்ணா போராட்டம் நடத்தினார். அப்போது பணிகள் நடக்கவில்லை என தி.மு.க. கவுன்சிலர்களே பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாநகராட்சி கூட்டம்
ஓசூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணை மேயர் ஆனந்தய்யா பேசும் போது, நான் இதுவரை வார்டு பணிகள் சம்பந்தமாக ஆணையாளரிடம் பல கோரிக்கை மனுக்கள் தந்து விட்டேன். ஆனால் அவை எந்த நிலையில் உள்ளன என்பது தெரியவில்லை. குடிநீர், தெருவிளக்கு, சாலைகள், கழிவுநீர் கால்வாய் இவைதான் மக்களின் அடிப்படை தேவைகள். இவற்றை நிறைவேற்று தான் நமது கடமை ஆனால் பணிகளே நடக்காததால், வார்டு பகுதிகளுக்கு செல்லவே முடிவதில்லை. மக்களின் கேள்விகளுக்கு பதில் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார். தி.மு.க. கவுன்சிலர் மாதேஸ்வரன் பேசும் போது, மாநகராட்சியில் காத்திருப்பு அறை ஒன்றை அமைக்க வேண்டும். மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு அறிஞர் அண்ணா பெயரை சூட்டி இருப்பது போன்று கூட்ட அரங்கில் அண்ணா படத்தை வைக்க வேண்டும் என்றார்.
வீட்டுக்கு ஒரு 'டார்ச் லைட்'
மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் எஸ்.நாராயணன் பேசுகையில், எனது வார்டு பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு டார்ச் லைட் வழங்க மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
அ.தி.மு.க. கவுன்சிலர் குபேரன் என்ற சங்கர் பேசுகையில், எனது வார்டு பகுதியில் நாய்த் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சிலர் நாய்கடிக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். நாய் தொல்லையை தடுக்கும் வகையில், அவற்றிற்கு எங்கள் சொந்த செலவில் அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். மேலும். வார்டுகளுக்கு ஒதுக்கப்படும் பணிகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சமின்றி நிதி மற்றும் பணிகளை ஒதுக்க வேண்டும் என்றார்.
தர்ணா போராட்டம்
கவுன்சிலர் குபேரனின் பேச்சுக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் ரவி, நாகராஜ், கிருஷ்ணப்பா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், தனது பேச்சை நிறுத்தவும், குறுக்கீடு செய்வதாகவும் கூறி குபேரன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. அதன்பிறகு அங்கு அமைதி திரும்பியது. தி.மு.க. கவுன்சிலர் ஆஞ்சப்பா பேசுகையில், மாநகராட்சியில் எந்த பணியும் நடப்பதில்லை. வார்டு மக்கள் முகத்தில் முடிக்கவே முடியவில்லை, அறுவெறுப்பாக பேசுகிறார்கள். எந்த பணிகளும் நடக்காததால் மாநகராட்சி எதற்கு? நாங்கள் எதற்கு? என்று ஆவேசத்துடன் கொந்தளித்தார். இதே போல், தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்சினைகள் குறித்தும், பணிகள் நிறைவேற்றப்படாதது பற்றியும் ஆவேசமாகவும், அதிருப்தியுடனும் அவையில் பேசினர். கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு மேயர் சத்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் பதிலளித்து பேசினர். இக்கூட்டத்தில் 137 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.