இரு தரப்பினர் கல்வீசி தாக்குதலால் பரபரப்பு


இரு தரப்பினர் கல்வீசி தாக்குதலால் பரபரப்பு
x

அரூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நடந்த போராட்டத்தின்போது இரு தரப்பினர் கல்வீசி தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி

அரூர்:

காத்திருப்பு போராட்டம்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எஸ்.பட்டி பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் சமூக மக்களுக்கு கடந்த 1991-ம் ஆண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 140 இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டன. அந்த பகுதியில் உள்ள பொது இடம், அங்கு வசிக்கும் மக்களின் எதிர்கால நலன் கருதி பள்ளிக்கூடம், நூலகம், சமுதாயக்கூடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட தேவைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த பொது இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்ட கட்டுமான பணிகளை தொடங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அங்கு கட்டுமான பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் நேற்று அங்கு திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வீச்சு

அப்போது காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், அந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். அப்போது சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இதைத்தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் கட்டுமான பணி தொடங்கிய பகுதிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த கட்டுமான பொருட்கள் அகற்றப்பட்டன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அரூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story