விவசாய சங்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு கலெக்டரிடம் தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கொடுத்த மனுவில், அதிக மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நஷ்டஈடு கிடைக்க உதவிட வேண்டும், மோகனூர் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகளுக்கு உடனடியாக பணம் கிடைக்க உதவிட வேண்டும். மருதாண்டகுறிச்சி வாய்க்காலை தூர்வார வேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உரம் கிடைத்திட உதவிட வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும்
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் கொடுத்த மனுவில், குறுவை தொகுப்பு திட்டம் விவசாயிகளுக்கு வழங்க அரசானை வந்துவிட்டது. காலதாமதப்படுத்தாமல் குறுவை தொகுப்பை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற செப்டம்பர், அக்டோபர், நவம்பரில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ய உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் தூர்வாரவும் வடிகால் வசதி ஏற்படுத்தவும், புதிய தடுப்பணைகள் கட்டவும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் காந்திபித்தன் கொடுத்த மனுவில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்தி கொள்ள உதவி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
திடீர் ஆர்ப்பாட்டம்
முன்னதாக விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள்திடீரென்று திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- கர்நாடகாவில் மேகதாது பகுதியில் அணையை கட்டினால் தமிழக விவசாயிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி பாசன பகுதிகள் முழுவதும் பாலைவனமாக மாறிவிடும். நீர்வரத்து குறைந்து விடும். எனவே ஒட்டுமொத்த விவசாயிகள் சங்கம் சார்பாக எதிர்ப்பை தெரிவித்து கொண்டிருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் மேகதாது பிரச்சினையை உடனடியாக கைவிட வேண்டும். இல்லை என்றால் வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழக விவசாயிகளின் ஒரு ஓட்டு கூட பதிவாகாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் ஒட்டு மொத்தமாக கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறக்கூடிய விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.