உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு


உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு
x

விருத்தாசலம் அருகே பட்டதாரி வாலிபர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே டி.வி.புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முருகானந்தம் (வயது 32). இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதன்பிறகு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த அவர் மீண்டும் 10 நாட்களுக்குள் வெளிநாடு செல்ல இருந்தார்.

சாவு

சம்பவத்தன்று இரவு சுமார் 9 மணி அளவில் டி.வி. புத்தூர் பாலம் அருகே முருகானந்தம் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது பற்றி கருவேப்பிலங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலத்த காயத்துடன் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலை மறியல்

இதையடுத்து முருகானந்தத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை ஆம்புலன்ஸ் மூலம் அவரின் சொந்த ஊரான டி.வி.புத்தூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதை பார்த்த அவரது உறவினர்கள், முருகானந்தத்தின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அவரது உடலை வாங்காமல், கருவேப்பிலங் குறிச்சி பஸ் நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் தலைமையில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியலை கைவிட்ட அவர்கள், இறந்த முருகானந்தத்தின் உடலை பெற்றுச்சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story