நகராட்சி தலைவர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு


நகராட்சி தலைவர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு
x

மணப்பாறை நகராட்சி தலைவர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

மணப்பாறை, ஜூன்.28-

மணப்பாறை நகராட்சி தலைவர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நகராட்சி தலைவர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த நகர்மன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் 11 பேரும், அ.தி.மு.க.வில் 11 பேரும், சுயேச்சைகளாக போட்டியிட்ட 5 பேரும் வெற்றி பெற்றனர்.

அதன்பின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுதா பாஸ்கரன் 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் மணப்பாறை நகராட்சியை முதல்முறையாக அ.தி.மு.க. கைப்பற்றியது.

ராஜினாமா கடிதம்

ஆனால், அதன் பின்னர் நகராட்சி துணைத்தலைவர் தேர்தல், நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் போதிய கவுன்சிலர்கள் பங்கேற்காததால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி தேர்தல் முடிந்து ஒருமுறை கூட நகராட்சி கூட்டம் நடைபெறவில்லை. இதற்கிடையில் நேற்று நகராட்சி தலைவர் சுதா பாஸ்கரன் மணப்பாறை நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு ஆணையரிடம், தான் ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை கொடுத்தார். அதனை ஆணையர் சியாமளா பெற்றுக் கொண்டார். மேலும் தன் சொந்தக்காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். 56 ஆண்டுகளுக்கு பிறகு மணப்பாறை நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றிய அ.தி.மு.க., அந்த பதவியில் சில மாதங்கள் கூட நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. நகராட்சி தலைவர் ராஜினாமா கடிதம் கொடுத்த சம்பவம் மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story