சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு காயம் அடைந்த மாட்டுடன் புகார் கொடுக்க வந்த பெண்ணால் பரபரப்பு மாடுகளை திருடும் கும்பலை கைது செய்ய கோரிக்கை
சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு காயம் அடைந்த மாட்டுடன் புகார் கொடுக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மாடுகளை திருடும் கும்பலை கைது செய்ய கோரிக்கை விடுத்தார்.
சேலம்
கலெக்டரிடம் புகார்
பனமரத்துப்பட்டி அருகே உள்ள குரால்நத்தம் பகுதியை சேர்ந்தவர் சுகந்தி (வயது 40). இவர், நேற்று தனது வீட்டில் வளர்க்கும் மாட்டுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்தார். அப்போது, அங்கிருந்த போலீசார் மாட்டுடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை எனக்கூறி சுகந்தியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் போலீசாரிடம் கூறும்போது, மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகளை ஒரு கும்பல் திருடி செல்வதாகவும், இது தொடர்பாக மல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கலெக்டரிடம் நியாயம் கேட்க, மாடு திருடும் கும்பலால் காயம் அடைந்த மாட்டுடன் வந்திருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து மாட்டை வெளியே நிற்க வைத்துவிட்டு சுகந்தியை மட்டும் போலீசார் கலெக்டரிடம் மனு கொடுக்க அனுமதி வழங்கினர். பின்னர் அவர் கலெக்டரிடம் மனு அளித்தார்.
25 மாடுகள் திருட்டு
இதுகுறித்து சுகந்தி கூறுகையில், நான் 30 மாடுகளை வைத்து வளர்த்து வருகிறேன். வீட்டில் இருந்து தினமும் மேய்ச்சலுக்கு மாடுகள் அவிழ்த்துவிடப்படும். ஆனால் அடிக்கடி மாடுகளை ஒருகும்பல் திருடி செல்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான், பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால் இதுவரை மாடு திருடும் கும்பலை கண்டுபிடிக்கவில்லை.
இதனிடையே, திப்பம்பட்டி மூலக்கரைக்காடு பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் எனது மாடு ஒன்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற பார்த்தபோது, அந்த மாட்டை அடித்து காயப்படுத்தியதால் அது நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறது. சுருக்கு கண்ணி வைத்து இதுவரை 25 மாடுகளை திருடி சென்றுள்ளனர். போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாடுகள் திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும், என்றார்.
மாடுகள் திருடும் கும்பலை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு காயம் அடைந்த மாட்டுடன் பெண் ஒருவர் புகார் மனு கொடுக்க வந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.