ஈரோட்டில் பரபரப்புபொதுமக்கள் திடீர் சாலை மறியல்சட்டவிரோத மது விற்பனையை தடுக்கக்கோரி நடந்தது


ஈரோட்டில் பரபரப்புபொதுமக்கள் திடீர் சாலை மறியல்சட்டவிரோத மது விற்பனையை தடுக்கக்கோரி நடந்தது
x

ஈரோட்டில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஈரோடு

ஈரோட்டில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

ஈரோடு மாநகராட்சி 9-வது வார்டுக்கு உள்பட்ட ராசாம்பாளையம் எஸ்.எஸ்.பி.நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் ஒரு வயதான தம்பதி சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மது வாங்கி குடிப்பவர்கள் அருகில் உள்ள வீடுகளின் முன்பு போதையில் விழுந்து கிடப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

இந்தநிலையில் எஸ்.எஸ்.பி.நகர் ராசாம்பாளையம் ரோட்டில் நேற்று காலை பொதுமக்கள் சிலர் திரண்டனர். அவர்கள் திடீரென நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

மது விற்பனை

எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை கிடையாது. ஆனால் வயதான தம்பதி சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருவதால், மது பிரியர்கள் ஆங்காங்கே குடிபோதையில் அலங்கோலமாக விழுந்து கிடக்கின்றனர். இதனால் பெண்கள், சிறுமிகள் வெளியே நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சட்டவிரோதமாக நடக்கும் மது விற்பனையை தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதற்கு போலீசார், "உரிய விசாரணை நடத்தப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்", என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story