பொள்ளாச்சியில் பரபரப்பு-10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி-வியாபாரி போக்சோவில் கைது


பொள்ளாச்சியில் பரபரப்பு-10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி-வியாபாரி போக்சோவில் கைது
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக வியாபாரியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக வியாபாரியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பள்ளி மாணவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த 15 வயது சிறுமி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் டியூசனுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு டியூசனுக்கு சென்று விட்டு, வீட்டிற்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற ஒருவர் சாக்கு மூட்டையை தூக்கி விடுமாறு கூறினார்.

இதை நம்பிய அந்த மாணவியும் அருகில் சென்று மூட்டையை தூக்க முயன்று உள்ளார். அதற்குள் அந்த ஆசாமி மாணவியின் வாயை பொத்தி மறைவான பகுதிக்கு இழுத்து சென்றதாக தெரிகிறது. மேலும் அங்கு வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அந்த ஆசாமியிடம் இருந்து மாணவி தப்பி செல்ல போராடினார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் கையை கடித்து வைத்து விட்டு மாணவி அங்கிருந்து தப்பி சென்றார்.

போக்சோவில் கைது

பின்னர் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் மாணவி நடந்த விவரம் குறித்து கூறி கதறி அழுதார். இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்திற்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் பாலக்காடு ரோட்டை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என்பதும், ஏ.டி.எஸ்.சி. தியேட்டர் ரோட்டில் மீன் கடை வைத்து வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர்.

தனியாக நடந்து சென்ற மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story