வாடிப்பட்டி பேரூராட்சியில் பரபரப்பு: அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம்


வாடிப்பட்டி பேரூராட்சியில் பரபரப்பு: அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம்
x

வாடிப்பட்டி பேரூராட்சி முன்பு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மதுரை

வாடிப்பட்டி,


வாடிப்பட்டி பேரூராட்சி முன்பு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

குப்பை கிடங்கில் திடீர் தீ

வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 10 தி.மு.க., கவுன்சிலர்களும், ஒரு சுயேச்சை கவுன்சிலரும், 6 அ.தி.மு.க. கவுன்சிலரும், 1 த.மா.கா கவுன்சிலரும் உள்ளனர். நேற்று காலை குலசேகரன்கோட்டை பகுதியில் உள்ள பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ பிடித்தது. இதனால் அங்கு புகைமூட்டமாக காணப்பட்டது. இதுகுறித்து அ.தி.மு.க.வை சேர்ந்த 4-வது வார்டு கவுன்சிலர் இளங்கோவன் தீயணைப்பு நிலைய அதிகாரி சதகப்துல்லாவிற்கு தகவல் தெரிவித்தார். உடனே தீயணைப்பு வீரர்கள் குப்பை கிடங்கிற்கு தீயணைப்பு வாகனத்துடன் அங்கு சென்றனர். ஆனால் உள்ளே செல்லமுடியாத அளவிற்கு குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது. இதனால் வேதனை அடைந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராடி குப்பைகளில் பரவிய தீயை அணைத்தனர்.

முற்றுகை போராட்டம்

இந்த சம்பவம் குறித்து பேரூராட்சி செயல் அலுவலருக்கும், மண்டல உதவி இயக்குனருக்கும் கவுன்சிலர் இளங்கோவன் தகவல் தெரிவித்தார். அதற்கு உதவி இயக்குனர் எந்த பிரச்சினையானாலும் செயல் அலுவலர் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியதால் வேதனை அடைந்த கவுன்சிலர் இளங்கோவன் இதுவரை 15 கோரிக்கைகள் முன்வைத்து மனுக்கள் கொடுத்தும் எதுவும் நடக்கவில்லை என்பதால் நேற்று மாலை 5 மணிக்கு வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தை ெதாடங்கினார். அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அசோக்குமார், வெங்கடேஸ்வரி, சூர்யா, பிரியதர்ஷினி, த.மா.கா. கவுன்சிலர் கீதா சரவணன் மற்றும் அ.தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் லட்சுமி, முன்னாள் கவுன்சிலர் திருப்பதி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் திரண்டனர்.

எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை

இது குறித்து தகவலறிந்த வெங்கடேசன் எம்.எல்.ஏ., பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன், தாசில்தார் மூர்த்தி, சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளர் அசோக் குமார், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் அ.தி.மு.க. கவுன்சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு எடுப்பதாக வெங்கடேசன் எம்.எல்.ஏ., கூறியதை தொடர்ந்து நேற்று இரவு 9.15 வரை நடத்திய போராட்டத்தை அ.தி.மு.க கவுன்சிலர்கள் விலக்கிக் கொண்டனர். இதனால் இந்த பகுதியில் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story