மாயமான சிலைக்கு பதிலாக புதிய சிலை வைத்ததால் பரபரப்பு


மாயமான சிலைக்கு பதிலாக புதிய சிலை வைத்ததால் பரபரப்பு
x

திருஉத்தரகோசமங்கை கோவிலில் மாயமான வெண்கலச்சிலைக்கு பதிலாக புதிய சிலை வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,


திருஉத்தரகோசமங்கை கோவிலில் மாயமான வெண்கலச்சிலைக்கு பதிலாக புதிய சிலை வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வராஹி அம்மன் கோவில்

ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற வராஹி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பவுர்ணமி உள்ளிட்ட தினங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலில் 7 பட்டர்கள் எனும் பூசாரிகள் பூஜைகள் செய்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு கடந்த 2019-ம் ஆண்டு ராமேசுவரத்தை சேர்ந்த ரகு என்ற பக்தர் ஒருவர் 1½ கிலோ எடையுள்ள முக்கால் அடி உயரமுள்ள வராஹி அம்மன் வெண்கலச்சிலையை தானமாக கொடுத்துள்ளார்.

இந்த சிலையை மூலஸ்தானத்தின் அருகில் வைத்து தினமும் வராஹி அம்மனுக்கு பூஜை செய்யும்போது இந்த சிலைக்கும் பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சிலை மாயம்

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த சிலை திடீரென்று காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஓரிருநாளில் அதேபோன்று புதிய சிலை அங்கு இருந்துள்ளது. காணாமல் போன சிலைக்கு பதிலாக புதிய சிலை வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பட்டர்களில் ஒருவரான மங்களம் என்பவர் ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியனிடம் புகார் செய்தார். அதில் கோவிலில் அன்றைய தினம் பூஜைகளை மேற்கொண்ட பட்டர் அருண்குமார்(வயது 35) என்பவர் வேறு ஒரு சிலையை வாங்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து திவான், கோவில் பட்டர்களான பூசாரிகள் அனைவரிடமும் விசாரணை நடத்தி உள்ளார்.

குறிப்பாக அருண்குமாரிடம் விசாரித்தபோது, தான் பூஜை செய்த அன்றுதான் சிலை காணாமல் போனதால் தன்மீது பழி விழுந்துவிடும் என்பதால் அதேபோன்ற சிலையை வாங்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

போலீசில் புகார்

இதுகுறித்து திவான் கூறியதாவது:-

காணாமல் போன சிலை ரூ.8 ஆயிரத்து 500 மதிப்பிலானது. தங்கம், வெள்ளி சிறிதளவில் கலந்து செய்த வெண்கல சிலையை எடுத்தவர்கள் யார் என்று விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவிக்கின்றனர். இதனால் விசாரித்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

வராஹி அம்மன் கோவிலில் பக்தர் ஒருவர் தானமாக கொடுத்த சிலை மாயமான சம்பவமும், பூசாரி ஒருவரே புதிய சிலை வாங்கி வைத்துள்ள சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story