அம்மாபேட்டை அருகே பரபரப்பு சம்பவம் வனத்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பிய வேட்டை கும்பல்


அம்மாபேட்டை அருகே பரபரப்பு சம்பவம்  வனத்துறையினரை நோக்கி   துப்பாக்கியால் சுட்டு தப்பிய  வேட்டை கும்பல்
x

அம்மாபேட்டை அருகே வனத்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மான் வேட்டை கும்பல் தப்பி ஓடியது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே வனத்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மான் வேட்டை கும்பல் தப்பி ஓடியது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

வனத்துறையினர் ரோந்து

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்டது பாலாறு பீட் பகுதி. தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு சென்னம்பட்டி வனச்சரகர் ராஜா தலைமையிலான வேட்டை தடுப்பு காவலர்கள் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது வாளாங்குழி பள்ளம் என்ற இடத்தில் 2 நாட்டு துப்பாக்கி மற்றும் மான் இறைச்சியுடன் 5 பேர் காட்டுக்குள் சுற்றித்திரிந்ததை பார்த்தனர். உடனே அவர்களை சுற்றிவளைத்த வனத்துறையினர் எங்களிடம் சரண் அடையுங்கள் என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் தப்பி ஓட முயன்றார்கள். இதனால் வனத்துறையினர் அவர்களை சரண் அடைய வைப்பதற்காக தங்களிடம் இருந்த துப்பாக்கியால் தரையை நோக்கி சுட்டார்கள்.

துப்பாக்கியால் சுட்டனர்

இதையடுத்து மான் வேட்டை கும்பல் திடீரென தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகளால் வேட்டை தடுப்பு காவலர்களை நோக்கி சுட்டார்கள். உடனே சுதாரித்துக்கொண்ட வேட்டை தடுப்பு காவலர்கள் அருகே இருந்த பாறையின் பின்னால் ஓடி மறைந்து கொண்டார்கள். இதை பயன்படுத்திக்கொண்ட வேட்டை கும்பல் வனத்துறையினரை நோக்கி சுட்டுக்கொண்டே தப்பி ஓடியது. ஆனால் பின் தொடர்ந்து துரத்திய வனத்துறையினர் அதில் ஒருவரை மட்டும் பிடித்தார்கள். எஞ்சிய 4 பேரும் துப்பாக்கிகளுடன் தப்பி ஓடிவிட்டார்கள்.

விசாரணை

இதையடுத்து பிடிபட்டவரை வனத்துைறயினர் சென்னம்பட்டி வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள கோவிந்தப்பாடி பகுதியை சேர்ந்த குமார் (வயது 40) என்பதும், தப்பி ஓடியவர்கள் கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா என்கிற காரவடையான், காமராஜ், செட்டிப்பட்டியை சேர்ந்த பச்சை கண்ணன், தர்மபுரி மாவட்டம் ஆத்துமேட்டூரை சேர்ந்த ரவி ஆகியோர் என்பதும் தெரிய வந்தது. மேலும் 5 பேரும் சேர்ந்து நாட்டு துப்பாக்கியால் சுட்டு மான் வேட்டையாடியதும் தெரிய வந்தது.

வலைவீச்சு

இதைத்தொடந்து குமாரை வனத்துறையினர் கைது செய்தார்கள். அவரிடம் இருந்த மான் இறைச்சி, நாட்டு துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் மருந்து ஆகியவற்றையும் பறிமுதல் செய்தார்கள். மேலும் தப்பி ஓடிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். வனத்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மான் வேட்டை கும்பல் தப்பி ஓடிய சம்பவம் அம்மாபேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story