அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான அமோனைட்ஸ்களுக்கான பிரத்யேக மையம்


அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான அமோனைட்ஸ்களுக்கான பிரத்யேக மையம்
x

அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான அமோனைட்ஸ்களுக்கான பிரத்யேக மையம் விரைவில் திறக்கப்படுகிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடத்தில், சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து போன கடல்வாழ் உயிரினமான அமோனைட்ஸ்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்லுயிர் எச்சங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வரும் 'அமோனைட்ஸ் மையத்தினை' கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான அம்மோனைட்ஸ் எனப்படும் நத்தை போன்ற தோற்றமுடைய உயிரினங்களின் படிவங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் கிடைக்கின்றன. பெரம்பலூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் அமோனைட்ஸ் படிமங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில் பிரத்யேக மையம் அமைக்கப்பட்டு வருகிறது. தலைக்காலி எனும் வகையினை சேர்ந்த அமோனைட்ஸ்கள் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டன. இந்த கடல்சார் உயிரினங்களில் படிமங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் காரை, கொளக்காநத்தம், பிலிமிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிடைக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 112 வகையான தொல்லுயிர் எச்சங்கள் கிடைக்கின்றன. அமோனைட்ஸ்களின் முழு உருவம் எவ்வாறு இருக்கும் என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக அந்த உயிரினத்தின் மாதிரி தோற்றம் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிடைக்கப்பபெற்ற 300 வகையான தொல்லுயிர் எச்சங்கள் இங்கு கட்சிப்படுத்தப்பட உள்ளது.அமோனைட்ஸ் குறித்து அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இந்த மையம் பெரிதும் பயனுள்ள வகையில் இருக்கும். பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்த மையம் சிறந்த பொழுதுபோக்கு மையமாக இருக்கும். தமிழக அளவில் அமோனைட்ஸ்களுக்கென்று பிரத்யேக அருங்காட்சியகம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை. விரைவில் பணிகள் முடிவடைந்து இந்த அமோனைட்ஸ் மையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

ஆய்வின்போது புவியியல் துறை உதவி மேலாளர் பிரசாந்த் சுந்தரேசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story