ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் செயல் அலுவலர் கைது


ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் செயல் அலுவலர் கைது
x

ஊட்டியில் உழவர் உற்பத்தியாளர் நிலையம் அமைக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மாவட்ட செயல் அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் உழவர் உற்பத்தியாளர் நிலையம் அமைக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மாவட்ட செயல் அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

உழவர் உற்பத்தியாளர் நிலையம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் தமிழக ஊரக புத்தாக்க திட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் மாவட்ட செயல் அலுவலராக இம்மானுவேல் பணிபுரிந்து வருகிறார். உதவி அதிகாரியாக நவீன்குமார் (வயது 28) பணியாற்றி வந்தார்.

தமிழக ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 15 உழவர் உற்பத்தியாளர் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக பழங்குடியினர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் ஒரு குழுவை சேர்ந்த விவசாயி சிவலிங்கம் என்பவரிடம், செயல் அலுவலருக்கு ஒவ்வொரு குழுவும் தலா ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என நவீன்குமார் தெரிவித்து உள்ளார்.

செயல் அலுவலர் கைது

இதுகுறித்து சிவலிங்கம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரம் பணத்தை விவசாயி சிவலிங்கத்திடம் கொடுத்து அனுப்பினர். அவர் ஊரக புத்தாக்க திட்ட அலுவலகத்தில் நவீன்குமாரிடம் பணத்தை கொடுத்தார். இதனை ரகசியமாக கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நவீன்குமாரை கையும், களவுமாக பிடித்தனர்.

தொடர்ந்து போலீசார் 3 மணி நேரம் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். விவசாயிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நவீன்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் லஞ்சம் வாங்க தூண்டுதலாக இருந்த மாவட்ட செயல் அலுவலர் இம்மானுவேல் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இம்மானுவேல் தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு சென்றிருந்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் இம்மானுவேலை கைது செய்தனர். அவரை ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story