அரசு பள்ளியில் அறிவியல் Exhibition
புதுச்சத்திரத்தில் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
புதுச்சத்திரம் வட்டார ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் வட்டார அளவிலான அறிவியல் கண்காட்சி புதுச்சத்திரம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசேகரன் தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
இதில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 27 மாணவர்கள் கலந்து கொண்டு அன்றாட வாழ்வில் ஒளியின் பங்கு மற்றும் பயன்பாடு குறித்த அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். போட்டியின் நடுவர்களாக, அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் கருப்பண்ணன், பூமாதேவி, காளியண்ணன், வசந்தா மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் செயல்பட்டனர். அவர்கள் முதல் 6 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மாவட்ட அளவிலான வானவில் மன்றப்போட்டிகளுக்கு தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர் தினேஷ்குமார் மற்றும் வானவில் மன்ற ஒன்றிய பொறுப்பு ஆசிரியை கனகவல்லி ஆகியோர் செய்திருந்தனர்.