சித்திரை திருவிழாவை முன்னிட்டு அரசு பொருட்காட்சி
சித்திரை திருவிழாவை முன்னிட்டு அரசு பொருட்காட்சி இன்று தொடங்குகிறது.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு அரசு பொருட்காட்சி இன்று தொடங்குகிறது.
பொருட்காட்சி
மதுரை சித்திரை திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சி நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு சித்திரை பொருட்காட்சி இன்று தொடங்குகிறது. இதையொட்டி கலெக்டர் அனிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், மேயர் இந்திராணி ஆகியோர் நேற்று தமுக்கம் மைதானத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் கலெக்டர் அனிஷ் சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவிழா நகரான மதுரையில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக ஆண்டுதோறும் அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இந்தாண்டு இந்த பொருட்காட்சி நாளை (அதாவது இன்று) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. அமைச்சர் சாமிநாதன் பொருட்காட்சியை தொடங்கி வைத்து பேசுகிறார். அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
அரசு துறை அரங்குகள்
அதில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகளும், மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆவின் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் 6 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள், அவற்றில் பயன்பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக கண்கவரும் வகையில் அரங்குகள் இடம்பெற உள்ளன.
கலைநிகழ்ச்சிகள்
மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதேபோல, இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தனியார் விளையாட்டு மற்றும் கேளிக்கை அரங்குகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள் இடம்பெற உள்ளன. மேலும், தினந்தோறும் இன்னிசை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்த பொருட்காட்சி 45 நாட்கள் நடக்கிறது. தினமும் மாலை 3.45 மணிமுதல் இரவு 10 மணி வரை நடைபெறும். நுழைவு கட்டமாக பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்து அரசுப் பொருட்காட்சியினை கண்டுகளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.