தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கண்டு ரசிக்கிறார்கள் லட்சக்கணக்கான புத்தகங்களுடன் பொதுமக்களை கவரும் 'கண்காட்சி'
சேலத்தில் லட்சக்கணக்கான புத்தகங்களுடன் பொதுமக்களை கவரும் ‘கண்காட்சி’ நடைபெற்று வருகிறது.
சேலம்,
ஆழமான அறிவால் ஆக்கபூர்வமான பேச்சாற்றலையும், அறிவு, திறன், தன்னம்பிக்கை போன்றவற்றையும் புத்தகங்களை வாசிப்பதால் நமக்கு கிடைக்கும் நல்ல பண்புகளாகும். வாழ்க்கையில் படிப்பு, வேலை என எந்த நிலையிலும் உயருவதற்கு ஏணியாக இருப்பது புத்தகங்கள் என்றால் அது மிகையாகாது. ஆனால் சமீப காலங்களாக மக்களிடம் புத்தக வாசிப்பு திறன் மிகவும் குறைந்துவிட்டது. அதற்கு காரணம் சமூகவலைதளம்.
வீடுகளில் இருந்தாலும், வேலை நிமித்தமாக வெளியில் சென்றாலும் செல்போன் இல்லாமல் நம்மால் இருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் படிப்பு சார்ந்த புத்தகங்களை மட்டுமே படிக்கிறார்கள். அதாவது, பாடபுத்தகங்கள் மதிப்பெண் பெறுவதை நோக்கமாக கொண்டுள்ளன. ஆனால் வாழ்க்கை முறை, ஒழுக்க நெறிகளை வளப்படுத்த வேண்டும் என்றால் பொதுவான புத்தகங்கள் அடித்தளமாய் உள்ளன. இதனை படிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டன.
புத்தக கண்காட்சி
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மக்களிடம் வாசிப்பு திறனை அதிகப்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் மாவட்ட தலைநகரங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன்படி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சேலம் புத்தக திருவிழா-2022 என்ற தலைப்பில் மாபெரும் புத்தக கண்காட்சி சேலம் புதிய பஸ்நிலையம் அருகே நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 20-ந் தேதி தொடங்கிய இந்த புத்தக திருவிழா வருகிற 30-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. இதில், தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ளூர் படைப்பாளர்கள் முதல் உலக படைப்பாளர்கள் வரை எழுதிய புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
வரவேற்பு
பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி கலை, இலக்கியம், பொது அறிவு, கவிதைகள், நாவல்கள், விடுகதைகள், திருக்குறள், கட்டுரைகள், பழமொழிகள், பொழுது போக்கு, அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பொதுமக்களின் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கும் இந்த புத்தக திருவிழா-கண்காட்சியை தினமும் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் வந்து செல்வதை காணமுடிகிறது. இந்த புத்தக கண்காட்சி குறித்து பொதுமக்கள், மாணவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் விவரம் வருமாறு:-
2 முறை நடத்த வேண்டும்
சேலம் பெரமனூரை சேர்ந்த ஏ.சங்கர்:-
நான் 4 ரோட்டில் நோட்டு, புத்தகம் கடை வைத்துள்ளேன். புத்தக கடைக்கு சென்றால் குறிப்பிட்ட புத்தகத்தை மட்டும் தான் பார்க்கவோ, வாங்கவோ முடியும். ஆனால் இதுபோன்ற கண்காட்சியில் எல்லா விதமான புத்தகங்களையும் நாம் பார்க்க முடியும். குறிப்பாக எழுத்தாளர்கள் யார்? என்பதை பார்த்து நமக்கு தேவையான புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம்.
குடும்பத்துடன் வந்தால் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக புத்தக திருவிழா அமைந்துள்ளது. ஆண்டுக்கு 2 முறை புத்தக திருவிழாவை நடத்த வேண்டும். சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பயனுள்ளதாக இருக்கிறது
கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பி.எட். கல்லூரி மாணவி ஷாலினி:-
புத்தக கண்காட்சியில் விதவிதமான புத்தகங்கள் உள்ளன. படிப்பு சம்பந்தமாக இல்லாமல் பொதுவான புத்தகங்கள் அதிகளவில் இருக்கிறது. இதற்கு முன்பு இதுபோன்ற புத்தக கண்காட்சிக்கு நான் சென்றது இல்லை. மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனக்கு தேவையான புத்தகங்களை வாங்கியுள்ளேன். இளம் தலைமுறையினரிடம் செல்போன் பார்க்கும் பழக்கங்கள் அதிகமாகிவிட்டது. அதை தவிர்த்து புத்தகங்கள் வாசிக்கும் பழக்க வழக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும்.
சிந்தனை திறன் அதிகரிக்கும்
அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த ஆசிரியர் தமிழ் அழகன்:-
அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கும் உண்டு. இதனால் எனது 2 மகள்களை புத்தக கண்காட்சிக்கு அழைத்து வந்துள்ளேன். சிறப்பான முறையில் புத்தக கண்காட்சி ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கக்கூடியது. கலை, இலக்கியம், நாவல் உள்பட பல்வேறு புத்தகங்களை வாங்கியுள்ளோம். அதை செலவாக கருதவில்லை, முதலீடாக நினைக்கிறேன். என்னை பொறுத்தவரையில் உலக அறிவை பெறுவதற்கு நாம் பல்வேறு தரப்பு புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தகங்கள் வாசிப்பதால் ஒருவரின் சிந்தனை திறன் அதிகரிக்கும். அவரது சொல் வளமும், கற்பனை வளமும் பெருகும்.
புத்தகம் ஒரு சிறந்த நண்பன்
சித்தனூரை சேர்ந்த இல்லத்தரசி ராஜேஸ்வரி:-
புத்தக வாசிப்பு என்பது அனைவரிடமும் குறைந்துவிட்டது. அதை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த புத்தக கண்காட்சி அமைந்திருக்கிறது. குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் அவர்கள் சார்ந்த பாடப்புத்தகங்களை மட்டும் தான் படிக்கிறார்கள். வாழ்வில் நல்ல ஒழுக்கங்களையும், எண்ணங்களையும் கற்கும் புத்தகங்களை படிப்பது இல்லை. புத்தகம் ஒரு சிறந்த நண்பன். புத்தக கண்காட்சியில் பொழுது போக்குஅம்சங்களும் உள்ளன. புத்தக திருவிழா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதுபோன்ற புத்தக கண்காட்சியை அடிக்கடி நடத்த வேண்டும். குறிப்பாக விசாலாமான இடத்தில் புத்தக திருவிழா நடத்துவதால் பொறுமையாக ஒவ்வொரு அரங்கமாக சென்று புத்தகங்களை பார்க்க முடிகிறது.
ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் இர்பான்:-
எனது பள்ளியில் இருந்து எங்களை ஆசிரியர்கள் புத்தக கண்காட்சிக்கு அழைத்து வந்தனர். இங்கு வந்து பார்த்தவுடன் புது அனுபவமாக இருக்கிறது. ஒவ்வொரு அரங்கத்துக்கும் சென்று நண்பர்களுடன் நிறைய புத்தகங்களை பார்த்தேன். எனக்கு பிடித்த புத்தகத்தை வாங்கியுள்ளேன். பாடப்புத்தகங்கள் தவிர கவிதை, பொழுதுபோக்கு போன்று நிறைய புத்தகங்கள் உள்ளன. இனிமேல் பொதுவான புத்தகங்களை வாங்கி தினமும் படிப்பேன்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.