நெசவாளர்களால் தயாரிக்கப்பட்ட கைத்தறி ரகங்கள் கண்காட்சி
நெசவாளர்களால் தயாரிக்கப்பட்ட கைத்தறி ரகங்கள் கண்காட்சி நடைபெற்றது.
கரூர் வெங்கமேடு தனியார் மகாலில் நேற்று 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெசவாளர்களால் தயாரிக்கப்பட்ட கைத்தறி ரகங்கள் சிறப்பு கண்காட்சி அரங்கினை கலெக்டர் பிரபுசங்கர் திறந்து வைத்தார். தொடர்ந்து 10 நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகள், 2 நெசவாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையும் வழங்கினார். அப்போது கலெக்டர் கூறியதாவது:- தேசிய கைத்தறி தினமானது கடந்த 1905-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந்தேதி, சுதேசி இயக்கத்தின் தொடக்கமாகவும், பொதுமக்களால் நடத்தப்பெற்ற சுதந்திர போராட்டத்தினை நினைவுகூறும் விதமாகவும், உள்நாட்டு உற்பத்தி பொருட்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. கைத்தறி நெசவு தொழிலானது விவசாயத்திற்கு அடுத்தபடியாக கவுரவிக்கப்பட வேண்டிய ஒரு பாரம்பரிய தொழிலாகும்.
இக்கண்காட்சியில் நெசவாளர்களால் தயாரிக்கப்பட்ட கதர் சேலை, கதர் ரகங்கள், தரை விரிப்பு, மெத்தை விரிப்பு, குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் விரிப்புகள், கைத்தறி பட்டு ரகங்கள் போன்ற பல்வேறு கைத்தறி ரகங்கள் கொண்ட அரங்கினை பொதுமக்களின் பார்வைக்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி இன்று ஒரு நாள் மட்டும் நடைபெறும். நெசவாளர்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் பொதுமக்கள் அதிக அளவில் கைத்தறி ரகங்களை பயன்படுத்தி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஆதரவு தர வேண்டும். மேலும் நெசவாளர்கள், பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது, என்றார்.