மகளிர் சுயஉதவிக்குழு பொருட்கள் கண்காட்சி
கள்ளக்குறிச்சியில் மகளிர் சுயஉதவிக்குழு பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் கண்காட்சி தொடக்கவிழா கள்ளக்குறிச்சி அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர்கள் கார்த்திகேயன், மாதேஷ், வட்டார இயக்க மேலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் ஷ்ரவன்குமார் கலந்து கொண்டு கண் காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடையவும்,, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் வகையிலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அதிக அளவில் ஊக்கத்தொகையுடன் கூடிய வங்கி கடன்கள் வழங்கி வருகிறார். இதன் மூலம் புதியதாக தொழில் தொடங்குவதற்கும், வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பதற்கும் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து வருகிறார்.
கைவினைப்பொருட்கள்
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைபடுத்தும் விதமாக மாவட்ட அளவிலான விற்பனை கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி வருகிற 5-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினர் உற்பத்தி செய்த பொம்மைகள், மூங்கிலில் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சத்தான சிறுதானிய தின்பண்டங்கள் உள்ளிட்டவைகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. எனவே சுயஉதவிக்குழு பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்திட பொதுமக்கள் அனைவரும் இந்த கண்காட்சியை பார்வையிட்டு அதிக அளவில் பொருட்களை வாங்கி பயனடைய வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.