சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுதலை: 2 அமைச்சர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்


சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுதலை: 2 அமைச்சர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
x

சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்ததை எதிர்த்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளுக்கு பதில் அளிக்கும்படி அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவருடைய மனைவி மணிமேகலை மீதும் கடந்த 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சராக இருக்கும் சாத்தூர் ராமச்சந்திரன், கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ரூ.44.56 லட்சம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவருடைய மனைவி ஆதிலட்சுமி பி.விசாலாட்சி, நண்பர் கே.எஸ்.பி.சண்முகமூர்த்தி ஆகியோர் மீதும் லஞ்ச ஒழி்ப்பு போலீசார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த 2 வழக்குகளும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

விடுவிப்பு

இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி அனைவரும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நிலுவையில் இருக்கும்போது, இந்த வழக்குகளை மேற்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதற்கு அனுமதி கிடைத்ததும், விசாரணை நடத்தி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி வழக்கை முடித்து வைக்கக்கோரி அறிக்கை தாக்கல் செய்தனர். இதன்படி இவர்கள் அனைவரையும் சொத்துகுவிப்பு வழக்குகளில் இருந்து விடுவித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தவறான முன் உதாரணம்

ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்புகளை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வரவழைத்து படித்து பார்த்தார். பின்னர், இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ''இந்த வழக்குகளில் போலீசாரின் விளக்கங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பித்தால், அது அவர்களை களங்கப்படுத்திவிடும். இதுபோல தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுப்பது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடக்கூடாது'' என்று கூறினார்.

முதலில் எதிர்ப்பு

அதற்கு நீதிபதி கூறியதாவது:-

தற்போது இந்த வழக்குகளில் இறுதி தீர்ப்பு அளிக்கவில்லை. இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி அமைச்சர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவுக்கு 2021-ம் ஆண்டு ஏப்ரல் வரை போலீசார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அப்படியே 'யூ-டர்ன்' போட்டுள்ளனர்.

ஏற்கனவே விசாரித்த வழக்கில் மேற்கொண்டு நடத்தப்படும் விசாரணையில் சேகரிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில், கூடுதல் குற்றப்பத்திரிகைதான் தாக்கல் செய்ய முடியும்.

சட்டவிரோதமானது

ஆனால், இந்த வழக்குகளில் ஆதாரங்கள் இல்லை என்று கூறி, வழக்குகளை முடித்து வைக்க போலீசார் பரிந்துரைத்துள்ளது வினோதமாக உள்ளது. இதை ஏற்று அனைவரையும் விடுவித்து இருக்கும் கீழ் கோர்ட்டு அணுகுமுறையும் சட்டவிரோதமானது

இந்த வழக்குகளின் ஆவணங்களை ஆராய்ந்தபோது ஏதோ ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடந்து இருப்பதை நிதர்சனமாக உணர முடிகிறது. இரு அமைச்சர்களுக்கு எதிரான இந்த விடுவிப்பு உத்தரவுகள் ஒரே மாதிரியாக காப்பியடித்தது போல உள்ளன. அதில் பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.

3 நாட்கள் தூங்கவில்லை

இது இந்த ஐகோர்ட்டின் மனசாட்சியை உலுக்கும் விதமாக உள்ளது. இதனால், நான் 3 நாட்கள் தூங்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் இந்த ஐகோர்ட்டு கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. இந்த ஐகோர்ட்டு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ அல்லது அரசுக்கோ உரித்தானது அல்ல. மாறாக நாட்டில் வாழும் குப்பனுக்கும், சுப்பனுக்கும் உரித்தானது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், ''தாமாக முன்வந்து எடுத்துள்ள இரு வழக்குகளுக்கு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமசந்திரன், லஞ்ச ஒழிப்பு சூப்பிரண்டு உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப வேண்டும். விசாரணையை செப்டம்பர் 20-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்'' என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story