காலக்கெடு முடிவுற்ற விதைகளை திறனாய்வு செய்து விற்பனை செய்ய வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலக்கெடு முடிவுற்ற விதைகளை திறனாய்வு செய்து விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலக்கெடு முடிவுற்ற விதைகளை திறனாய்வு செய்து விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து விதைப் பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் விஜயகுமார், நிலைய வேளாண்மை அலுவலர் பிரசன்னா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திறனாய்வு
விதை விற்பனையாளர்கள் சான்று அட்டைகளில் கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் விதைகளை மீண்டும் விதை உற்பத்திக்கோ அல்லது தானிய உற்பத்திக்கோ வினியோகம் செய்து முடிக்க வேண்டும். காலக்கெடு முடிவுற்ற விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்வது விதைச் சட்டப்படி குற்றமாகும். காலக்கெடு முடிவுற்ற விதைகளை திறனாய்வு செய்த பிறகுதான் விற்பனை செய்ய வேண்டும்.
வெளி மாநிலங்களில் இருந்து சான்று செய்யப்பட்ட விதை குவியல்களுக்கு விதைச்சான்று இயக்குனர் அனுமதியும், தமிழ்நாட்டில் சான்று செய்யப்பட்ட விதைகுவியல்களுக்கு அந்தந்த பகுதி விதைசான்று உதவி இயக்குனர் அனுமதியும் பெற வேண்டும். திறனாய்வு கட்டணமாக தமிழகத்தில் சான்று அட்டை கட்டிய விதைக்குவியலுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ50-ம், விதைப்பரிசோதனை கட்டணமாக ரூ.80-ம், வெளிமாநிலத்தில் சான்றட்டை கட்டிய விதைக்குவியல்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.100-ம் விதைப்பரிசோதனை கட்டணமாக ரூ.80-ம் செலுத்தவேண்டும்.
முளைப்புதிறன்
சம்பந்தப்பட்ட விதை குவியல்களுக்கு விதை மாதிரிகள் விதைச்சான்று அலுவலரால் எடுக்கப்பட்டு விதைப் பரிசோதனை நிலையத்திற்கு பகுப்பாய்வுக்காக அனுப்பப்படுகிறது. முளைப்புதிறன் தேர்ச்சி பெற்ற விதைக்கு மட்டும் திறனாய்வு செய்யப்படுகிறது. விதைப்பரிசோதனை செய்த நாளிலிருந்து 6 மாதங்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது.
எனவே மயிலாடுதுறை மாவட்டத்திற்கான விதை விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள காலக்கெடு முடிந்த விதைகளை திறனாய்வு செய்ய முளைப்புதிறன் சோதனைக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.