அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து சட்டசபை நிகழ்வுகள் படிப்படியாக நேரலையில் ஒளிபரப்பு: ஐகோர்ட்டில், பதில் மனு


அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து சட்டசபை நிகழ்வுகள் படிப்படியாக நேரலையில் ஒளிபரப்பு: ஐகோர்ட்டில், பதில் மனு
x

அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து சட்டசபை நிகழ்வுகள் படிப்படியாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும். இதுதொடர்பாக சபாநாயகர் தான் இறுதி முடிவு எடுக்க முடியும் என்று சென்னை ஐகோர்ட்டில் சட்டசபை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யக்கோரி தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளுக்கு தமிழ்நாடு நாடு சட்டசபை செயலர் சீனிவாசன், ஐகோர்ட்டில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சட்டசபை சபாநாயகரின் ஒப்புதலுடன் கவர்னரின் உரை, நிதிநிலை அறிக்கை போன்ற முக்கிய நிகழ்வுகள் தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கவர்னர் உரை, பட்ஜெட், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலளிப்பது, அரசு விதி 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சபாநாயகர் முடிவு

இதுதவிர யூடியூப், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகவும் அவ்வப்போது ஒளிபரப்பப்படுகிறது. சட்டசபை அதிகாரிகள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் நாடாளுமன்ற இரு அவைகளிலும், பல்வேறு மாநிலங்களிலும் சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய பின்பற்றும் நடைமுறைகளை ஆய்வு செய்துள்ளனர்.

அனைத்து அம்சங்களையும் முழுமையாக ஆராய்ந்து சட்டசபை நிகழ்வுகள் படிப்படியாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும். இதுதொடர்பாக சபாநாயகர் தான் இறுதி முடிவு எடுக்க முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எஸ்.பி.வேலுமணி

இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைக்கக்கோரி அ.தி.மு.க., கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியும் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், "கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் சட்டசபையில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்களின் பேச்சுகள் பதிவு செய்யப்பட்டு, எடிட் செய்யப்பட்டு தொலைக்காட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் தற்போதைய ஆட்சியில் எதிர்கட்சியினரின் கேள்விகளை திட்டமிட்டு மறைத்து குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் ஒளிபரப்ப அனுமதிக்கின்றனர்'' என்று கூறியிருந்தார்.

தலையிட முடியாது

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், அரசியலமைப்பு சாசன சட்டத்தின் கீழ் இயங்கும் சட்டசபையில் நிகழ்வுகள் தொடர்பான விசயங்களில் ஐகோர்ட்டு தலையிட முடியாது. மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

நேரமில்லா நேரத்தை உடனடியாக நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாது. அதுதொடர்பாக சபாநாயகர் தான் முடிவு எடுக்க வேண்டும். மேலும் எஸ்.பி.வேலுமணி, பல ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் தன்னை இணைக்கக்கோருவதை ஏற்க கூடாது'' என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை ஜூலை 26-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story