139 அரங்குகளுடன் ஜவுளி தொழில்துறை கண்காட்சி தொடங்கியது


139 அரங்குகளுடன் ஜவுளி தொழில்துறை கண்காட்சி தொடங்கியது
x

139 அரங்குகளுடன் ஜவுளி தொழில்துறை கண்காட்சி தொடங்கியது

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் அருகே வெளிநாடு, உள்நாட்டு நிறுவனத்தினரின் 139 அரங்குகளுடன் ஜவுளி தொழில்துறை கண்காட்சி நேற்று தொடங்கியது. திரளானவர்கள் கண்காட்சியை பார்வையிட்டு வர்த்தக விசாரணை நடத்தினார்கள்.

நூல் கண்காட்சி

யார்னெக்ஸ் மற்றும் டெக்ஸ் இந்தியா சார்பில் ஜவுளி தொழில்துறை கண்காட்சி திருப்பூர் அருகே ஐ.கே.எப். வளாகத்தில் நேற்று காலை தொடங்கியது. யார்னெக்ஸ் கண்காட்சியின் 23-வது பதிப்பு மற்றும் டெக்ஸ் இந்தியாவின் 13-வது பதிப்பு கண்காட்சியாக நடக்கிறது. இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் முன்னணி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் 139 அரங்குகளை அமைத்துள்ளன.

இந்த கண்காட்சியை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிட்மா செயலாளர் ராஜாமணி, டிப் சங்க தலைவர் அகில் மணி, யார்னெக்ஸ் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ராஜா சண்முகம் கூறும்போது, 'சீனாவுக்கு செல்லும் பின்னலாடை ஆர்டர்கள் இந்தியா வரத்தொடங்கியுள்ளது. சாதகமான சூழ்நிலை நிலவி வரும் இந்த நேரத்தில் இந்த கண்காட்சி வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மதிப்புக்கூட்டப்பட்ட ஆடைகளுக்கு தேவையானவை இந்த அரங்குகளில் இடம்பெற்றுள்ளன. அதுபோன்ற ஆடைகளை தயாரித்து விற்பனை செய்தால் வர்த்தகம் வளர்ச்சி பெறும்' என்றார்.

நூல் ரகங்கள்

பின்னலாடைகளை தயாரிக்க உதவும் நூல்களில் இயற்கை பருத்தி ரகம் மற்றும் சிந்தடிக், இவை தவிர சிறப்பு வகைகள், பருத்தி, கம்பளி, பட்டு, லினன் கொண்ட பிளெண்டடு நூலிழைகள் கண்காட்சியில் அதிகம் இடம்பெற்றுள்ளன.

எலாஸ்டிக், பேன்சி மற்றும் சிறப்பு ஆடை துணி ரகங்களில் நிட்டட், எம்ப்ராய்டரி, கிரே, இம்போர்ட்டட், டெனிம், பாட்டம் வெயிட், பிரிண்ட், பிராசஸ்டு, சில்க், வெல்வெட், வுலன், மில்கள் மற்றும் விசைத்தறிகளில் தயாரிக்கப்பட்ட துணி ரகங்கள், டிரிம்ஸ், பட்டன்கள், ஹேங்கர்கள், ஜிப்பர்கள், இண்டர்லைனிங், லேபிள்கள், லேஸ்கள், ஸ்டோன்ஸ், ஸ்டட்ஸ், டேப்ஸ், தையல், எம்ப்பிராய்டரி போன்ற நவீன தயாரிப்புகள் இந்த அரங்குகளில் இடம்பெற்றுள்ளன.

வெளிநாட்டினர்

ஆமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, பில்வாரா, சண்டிகர், சென்னை, கொச்சி, கோவை, டெல்லி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், மதுரை, பொள்ளாச்சி, சேலம், திருப்பூர், பரிதாபாத், குர்கோவான், ஜலந்தர், கொல்கத்தா, லூதியானா, மீரட், மும்பை, நொய்டா போன்ற நகரங்களில் இருந்தும், ஆஸ்திரியா, அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் நிறுவனத்தினர் அரங்குகளை அமைத்துள்ளனர்.

விசைத்தறி, பின்னலாடை நிறுவனங்கள், சர்வதேச கொள்முதல் நிறுவனங்கள், அவர்களின் முகவர்கள், ஆடைகள் தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள், அப்பேரல் பிராண்டுகள், இறக்குமதியாளர்கள், பேஷன் டிசைனர்கள், பேஷன் லேபிள்கள், வினியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த கண்காட்சியை பார்வையிட்டு வருகிறார்கள்.

நாளையுடன் நிறைவு

இந்த கண்காட்சியில் வர்த்தகர்கள் பங்கேற்றனர். வர்த்தகத்துக்கு இணக்கமான சூழலில் வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஜவுளி சந்தையில் நிலவும் சாதமான சூழலால் இந்த கண்காட்சிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர். இந்த கண்காட்சி நாளையுடன் (சனிக்கிழமை) நிறைவு பெறுகிறது.

1 More update

Related Tags :
Next Story