தென்னைநார், மதிப்பு கூட்டு பொருட்கள் ஏற்றுமதியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்
தென்னை நார் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் ஏற்றுமதியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல்கந்தசாமி ஆகியோர் மனு கொடுத்தனர்.
தென்னை நார் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் ஏற்றுமதியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல்கந்தசாமி ஆகியோர் மனு கொடுத்தனர்.
தென்னை நார் தொழில்
புதுடெல்லியில் மத்திய மந்திரி பியூஸ் கோயலை நேரில் சந்தித்து எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல்கந்தசாமி ஆகியோர் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஊரடங்கு அறி விக்கப்பட்டது. இதனால் உலக அளவில் பணமதிப்பு நிலையின் மை மற்றும் பொருளாதார நிலையின்மை ஏற்பட்டது. இதன் காரணமாக மூலப்பொருட்கள் விலை அதிகமாகவும், உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை குறைவாகவும் உள்ளது.
இதனால் உற்பத்தியாளர்கள், வங்கிகளில் கடன் தவணைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சூழலை கருத்தில் கொண்டு வங்கிகளின் என்.பி.ஏ. வகை கடன் தவணை செலுத்த வேண்டிய நாட்களை 90 நாட்களில் இருந்து 180 நாட்களாக உயர்த்தி கொடுக்க வேண்டும்.
அனுபவம் வாய்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை கொண்ட குழு வை அமைத்து தென்னை நார் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் ஏற்றுமதி தொழிலை மறுசீரமைப்பு செய்து மேம்படுத்தி அன்னிய செலவாணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மீண்டும் இயக்க வேண்டும்
இதேபோல் அவர்கள் மத்திய ரெயில்வே மந்திரியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அகல ரெயில்பாதையாக மாற்றப்பட்ட பிறகு மீட்டர் கேஜ் ரெயில்பாதையாக இருந்த போது இயக்கப்பட்ட கோவை- ராமேசுவரம் ரெயில் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்.
தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கோவையில் இருந்து பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக தூத்துக்குடி ரெயில் இயக்க வேண்டும்.
கோவையில் இருந்து பொள்ளாச்சி, திருச்சி, தஞ்சாவூர் வழியாக காரைக்காலுக்கு ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தில் மூடப்பட்ட செட்டி பாளையம், நல்லட்டிபாளையம், கோவில்பாளையம் ரெயில் நிலையங்களை மீண்டும் திறக்க வேண்டும்.
பொள்ளாச்சிக்கு மெமு ரெயில்
பொள்ளாச்சி-போத்தனூர் இடையே மின் மயமாக்கல் பணிகள் முடிந்து காலை, மாலை நேரங்களில் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வழியாக பொள்ளாச்சிக்கு மெமு ரெயில் இயக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.