நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு


நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
x
தினத்தந்தி 4 April 2024 1:32 AM GMT (Updated: 4 April 2024 2:23 AM GMT)

நெல்லையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரெயில் நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் (எண்:-06030) இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடைகிறது.

இதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கட்கிழமை தோறும் (எண்:-06029) இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லையை சென்றடையும். இந்த ரெயில் சேவையானது கடந்த 2022-ம் ஆண்டு முதல் பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேவை கடந்த மாதத்துடன் நிறைவு பெற்றது. இதனால் இந்த மாதத்தில் ரெயில் நீட்டிக்கப்படாமல் அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் அந்த ரெயிலை தொடர்ந்து இயக்கி சேவையை நீட்டிக்க வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-நெல்லை வாராந்திர சிறப்பு ரெயிலை வருகிற மே மாதம் வரை நீட்டித்து சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதுதொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மேட்டுப்பாளையம்- நெல்லை இடையிலான வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லை-மேட்டுப்பாளையம் இடையிலான வாராந்திர சிறப்பு ெரயில் (எண்:-06030) வருகிற 7-ந் தேதி முதல் மே மாதம் 26-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும், நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில்நிலையம் வந்தடையும். இதேபோல மேட்டுப்பாளையம் - நெல்லை இடையிலான வாராந்திர சிறப்பு ரெயில் (எண்:-06029), வருகிற 8-ந் தேதி முதல் மே மாதம் 27-ந் தேதி வரை திங்கட்கிழமை தோறும், மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த ரெயில்கள் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story