வாளை கழுத்தில் வைத்து மிரட்டி பெயிண்டரிடம் பணம் பறிப்பு
வாளை கழுத்தில் வைத்து மிரட்டி பெயிண்டரிடம் பணம் பறிப்பு
சிங்காநல்லூர்
சிங்காநல்லூரில் வாளை எடுத்து கழுத்தில் வைத்து மிரட்டி பெயிண்டரிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாளை கழுத்தில் வைத்து மிரட்டல்
கோவை நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் கோமதிசங்கர் (வயது 24) பெயிண்டர். இவர் நேற்றுமுன்தினம் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கோமதி சங்கரிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் பணம் கொடுக்க மறுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து அவரது கழுத்தில் வைத்து மிரட்டி அவரிடம் இருந்த ரூ.400 பறித்து விட்டு தப்பி செல்ல முயன்றார்.
கைது
இதனால் அதிர்ச்சியில் கோமதி சங்கர் சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மடக்கி பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கணபதி மூர்மார்க்கெட்டை சேர்ந்த எலக்ட்ரீசியன் சூர்யா (25) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.