ஆன்லைன் செயலி மூலம் கடன் வழங்கி வியாபாரியை மிரட்டி ரூ.18 லட்சம் பறிப்பு


ஆன்லைன் செயலி மூலம் கடன் வழங்கி வியாபாரியை மிரட்டி ரூ.18 லட்சம் பறிப்பு
x

சாத்தூரை சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு ஆன்லைன் செயலி மூலம் கடன் வழங்கிய நபர்கள் அவரை மிரட்டி ரூ.18 லட்சம் பறித்தது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

சாத்தூரை சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு ஆன்லைன் செயலி மூலம் கடன் வழங்கிய நபர்கள் அவரை மிரட்டி ரூ.18 லட்சம் பறித்தது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கடன் வழங்கும் செயலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த வியாபாரி ஒருவர், தனது தொழிலை விரிவுபடுத்த ஆன்லைன் கடன் செயலி மூலம் கடந்த மார்ச் 30-ந் தேதி, 27 ஆன்லைன் விண்ணப்பங்களை அனுப்பி ரூ.28 லட்சத்து 93 ஆயிரத்து 643-ஐ கடனாக பெற்றார். கடன் கொடுத்த நபர்கள் கடந்த ஏப்ரல் 4-ந் தேதி முதல் வியாபாரியை செல்போன் மூலம் மிரட்ட தொடங்கினர். கேட்கும் தொகையை செலுத்தாவிட்டால் கடன் பெற்ற வியாபாரியையும், குடும்பத்தாரையும் தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டினர்.

இதனை தொடர்ந்து கடன் பெற்ற வியாபாரி ரூ.47 லட்சத்து 9 ஆயிரத்து 634-ஐ செலுத்தியுள்ளார். மேலும் அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் இது பற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

கைது

இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ஆருண் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாஞ்சேரி மற்றும் கோழிக்கோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த அப்துல் ரகுமான்(வயது 53), முகமது சாஜித்(42) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து செயலி மூலம் கடன் வழங்குவதற்காக பயன்படுத்திய 65 சிம்கார்டுகள், 17 செல்போன்கள், 10 காசோலை புத்தகங்கள், 6 ஏ.டி.எம். கார்டுகள், ஒரு மோடம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

வலைவீச்சு

மேலும் கடன் பெற்ற வியாபாரி கூடுதலாக செலுத்தியுள்ள ரூ.18 லட்சத்து 15 ஆயிரத்து91-ஐ கைப்பற்ற இந்த மோசடி கும்பலைச் சேர்ந்த முக்கிய நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story