டாஸ்மாக்கடை மேற்பார்வையாளரிடம் ரூ.6¾ லட்சம் பறிப்பு: மர்மநபர்களுக்கு வலைவீச்சு


டாஸ்மாக்கடை மேற்பார்வையாளரிடம் ரூ.6¾ லட்சம் பறிப்பு: மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x

தோகைமலையில் டாஸ்மாக்கடை மேற்பார்வையாளரிடம் ரூ.6¾ லட்சத்தை பறித்து சென்ற 3 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்

டாஸ்மாக்கடை மேற்பார்வையாளர்

கரூர் மாவட்டம், தோகைமலையில் உள்ள பாதிரிப்பட்டி பிரிவு சாலை அருகே டாஸ்மாக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக நெய்தலூர் ஊராட்சி களத்துபட்டி பகுதியை சேர்ந்த பிச்சைக்கண்ணு (வயது 49) என்பவர் பணியாற்றி வருகிறார்.இந்தநிலையில் மதியம் 2 மணி அளவில் டாஸ்மாக்கடையில் கடந்த 16 மற்றும் 17-ந்தேதியில் மது விற்பனை செய்யப்பட்ட பணம் ரூ.6 லட்சத்து 71 ஆயிரத்து 460-ஐ ஒரு பையில் எடுத்துக்கொண்டு தோகைமமையில் உள்ள ஒரு வங்கியில் செலுத்துவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார்.

பணம் பறிப்பு

அப்போது சாப்பாடு நேரம் என்பதால் பிச்சைக்கண்ணு தோகைமலை ஒன்றிய அலுவலகத்தின் அருகில் உள்ள ஒரு உணவகத்திற்கு தான் கொண்டு வந்த பணப்பையுடன் சென்று சாப்பிட்டு விட்டு வங்கிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளை எடுக்க வந்துள்ளார். அப்போது பிச்சைக்கண்ணு தனது கையில் வைத்திருந்த பணப்பையை அந்த வழியாக வந்த 19 வயது வாலிபர் பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தார்.இதைக்கண்ட பிச்சைக்கண்ணு அதிர்ச்சி அடைந்து, அந்த வாலிபரை துரத்தி கொண்டு ஓடினார். அதற்குள் அந்த வாலிபர் ஏற்கனவே தயார் நிலையில் மோட்டார் சைக்கிளில் மறைந்து நின்றிருந்த 2 வாலிபர்களுடன் பணப்பையுடன் மணப்பாறை மெயின் சாலையில் தப்பி சென்று விட்டார். பின்னர் அவர்களை துரத்தி சென்றும் பிடிக்க முடியவில்லை.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து பிச்சைக்கண்ணு தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து 3 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் நேற்று தோகைமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story